ஜெயங்கொண்டம் அருகே சாப்பிடும்போது மாஸ்க் இல்லை பெண்ணுக்கு அபராதம் விதிப்பு

ஜெயங்கொண்டம்,ஏப்.14: சாப்பிடும்போது மாஸ்க் இல்லாததால் பெண்ணுக்கு அபராதம் விதித்த வருவாய்த்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி தேளூர், ரெட்டிப்பாளையம் பகுதிகளில் நேற்று வருவாய் துறையினர் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலித்தனர். அப்போது வி.கைகாட்டி ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி அலமேலு(40). இவர் அப்பகுதியில் சிறியதாக டீக்கடை, பழக்கடை நடத்தி வருகின்றார். நேற்று மாலை கடையில் யாரும் இல்லாத்தால் அலமேலு தான் அணிந்திருந்த மாஸ்க்கை சிறிது இறக்கி விட்டு உணவு அருந்தினார்.

அப்போது அங்கு வந்த வருவாய்த்துறையினர் மாஸ்க் அணியவில்லை என கூறி அலமேலுவுக்கு ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர். அப்பகுதியில் வணிகர்கள் ஒரு சிலரிடமும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்தும் அவர்களிடமும் அபராதம் வசூலித்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: