மின்கம்பங்கள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது லத்தேரி- பரதராமி சாலையில் இருளில் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கே.வி.குப்பம், ஏப்.10: இருள் சூழ்ந்து காணப்படும் லத்தேரி- பரதராமி சாலையில் மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி- பரதராமி சாலை உள்ளது. இந்த சாலையில் லத்தேரி பணமடங்கி, காளம்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளை அடங்கியது. மேலும் லத்தேரியிலிருந்து பரதராமி, பணமடங்கி வழியாக ஆந்திர மாநிலம், சித்தூருக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.இந்த சாலை வழியாக தனியார், அரசு பள்ளிகள், கிராம நிர்வாக அலுவலங்கள், கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், பணமடங்கி காவல் நிலையம், தமிழக- ஆந்திர சோதனை சாவடிகள், கோயில்கள், ராஜா தோப்பு அணை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேலும் பரதராமியிலிருந்து காட்பாடி மற்றும் வேலூருக்கும் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பஸ் அல்லது இருசக்கர வாகனங்களில் வியாபார நிமித்தமாக சென்று வருகின்றனர்.அவ்வாறு செல்லும் இச்சாலையில் பெரும்பாலன இடங்களில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் அவரசர நிமித்தமாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

மேலும் மின் விளக்குகள் இல்லாமல் இருப்பதால் விபத்தும், சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்கம்பம் அமைப்பதற்காக தொடங்கிய பணிகள் கிடப்பில் போடப்பட்டு, மின்கம்பங்கள் சாலையின் அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இருள் சூழ்ந்துள்ள சாலையில் மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: