20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டுமாடு கிரேன் உதவியுடன் மீட்பு

ஊட்டி,ஏப்.9: ஊட்டி  அருகே ரோகினி சந்திப்பு பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 20  அடி பள்ளத்தில் தவறி விழுந்து படு காயமடைந்த காட்டுமாட்டை கிரேன் உதவியுடன்  வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீலகிரி வன  கோட்டத்திற்குட்பட்ட ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் உள்ளிட்ட  பகுதிகளில் காட்டுமாடுகள் கணிசமாக உள்ளது. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும்  உணவு தேடி குடியிருப்பை ஒட்டிய பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்நிலையில்  தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதிகளில் செடி கொடிகள் காய்ந்துள்ளன.  தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஊட்டி -  கூடலூர் சாலையில் ரோகினி சந்திப்பு பகுதியில் சுற்றி திரிந்த காட்டுமாடு  கூட்டம் ஒன்று ரோகினி சந்திப்பில் இருந்து தமிழகம் செல்லும் சாலையில்  சென்றுள்ளது.

அப்போது அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் சென்ற காட்டுமாடு  அங்குள்ள தடுப்புச்சுவரை ஒட்டி மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த போது தவறி 20 அடி  பள்ளத்தில் விழுந்தது. அதிகாலை வேலையில் கேரட் அறுவடை பணிக்கு சென்ற  தொழிலாளர்கள் கேரட் தோட்டத்திற்குள் காட்டுமாடு விழுந்து கிடந்ததை பார்த்து  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு  வந்து பார்த்த போது, அந்த காட்டுமாடு 3 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுமாடு  என்பது தெரியவந்தது. மேலும் தவறி விழுந்ததில் காலில் பலத்த காயம்  ஏற்பட்டு எழுந்து நடக்க முடியாமல் இருந்தது ெதரியவந்தது. இதையடுத்து  உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் அப்பகுதிக்கு வந்து காட்டுமாட்டினை  பார்வையிட்டார். கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இருந்து காட்டுமாடு  மீட்கப்பட்டது. பின்னர் சிகிச்சை அளிப்பதற்காக வாகனத்தில் ஏற்றி  எர்த்தன்டேம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

Related Stories: