ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டை தூய அலங்கார அன்னை ஆலய திருவிழா

ஜெயங்கொண்டம், மார்ச் 26: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய அலங்கார அன்னை பேராலயம் நேற்று மாலை புதுப்பிக்கப்பட்டு நேர்ந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தப் பேராலயம் புதுப்பிக்கும் பணி பங்குத்தந்தை வின்சென்ட் ரோச் மாணிக்கம், உதவி தந்தையர்கள் ஜோமிக்ஸ் சாவியோ, பிலவேந்திரன் மற்றும் ஊர் நாட்டார்கள், பேரவை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் நிதிப் பங்களிப்பில் நடைபெற்றது. கோபுரத்தின் தன்மையை கருதி வெளிநாட்டிலிருந்து ஓடுகள் அமைத்து சிறப்பாக பணி முடிவடைந்தது. புதிதாக அமைக்கப்பட்ட கலைநயமிக்க பீடம் இயேசுவின் முப்பரிமாண சொரூபங்கள் கருங்கல்லால் ஆன கொடி மரம் போன்றவை பொதுமக்களை கவர்ந்தது.

நேற்று மாலை 6 மணி அளவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, பாண்டி, கடலூர் உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர், குடந்தை மற்றும் கோட்டாறு மறைமாவட்ட

முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், ஜெயங்கொண்டம் வட்டார முதன்மை குரு அலெக்சாண்டர் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.

முன்னதாக பங்குத்தந்தை வின்சன்ட் ரோச் மாணிக்கம் வரவேற்றார். இந்த நேர்ந்தளிப்பு விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னியர்கள், வரதராஜன்பேட்டை மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டார்கள் பங்கு பேரவை உறுப்பினர்கள் கட்டிடக் கலைஞர்கள் முன்னாள் இந்நாள் ராணுவத்தினர், காவல்துறையினர், ஆசிரியர்கள், பக்த சபையினர், வணிகர் சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: