* கால்நடைகளுக்கு ஆபத்து
* நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே உப்பனாற்று நீர் ரசாயன தண்ணீரால் மாசுப்படுகிறது. இதனால் கால்நடைகள் செத்துமடிகியது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லூர் மற்றும் பழையபாளையம் கிராம பகுதிகளில் இடைப்பட்ட பகுதியில் பழையபாளையம் உப்பனாறு செல்கிறது.
இது நல்லூர், பழையபாளையம், நரிமுடுக்கு, கொடக்காரமூலை,தற்காஸ் உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் சென்று இறுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலந்து வங்க கடலில் கலந்து வருகிறது.
இந்த உப்பனாற்றில் கடல் நீர் உள் புகாதவாறு விளை நிலங்களை பாதுகாக்கும் வகையில் தற்காஸ் கிராமத்தில் கதவணை கட்டப்பட்டது. ஆற்றின் குறுக்கே தற்காஸ் கிராமத்தில் கதவணை கட்டப்பட்டதால், உப்பு நீர் உள்ளே செல்வது தடுக்கப்பட்டது.
ஆனால் ஆற்றின் கரை ஒட்டி உள்ள நிலப்பகுதிகளில் தொடர்ந்து இறால் குட்டை அமைத்து அதில் உப்பு நீரை பாய்ச்சி இறால் வளர்ப்பு செய்து வருவதால், அப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் விளைநிலங்கள் இறால் குட்டைகளாக மாறி உள்ளன. உப்பனாற்றுக்குள் உப்பு நீர் புகாமல் தடுக்கப்பட்ட நிலையிலும் இறால் குட்டைகளால் ஆற்று நீர் பெரிதும் மாசுபட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பெரிதும் மாசு படுவதுடன் ஆற்றை ஒட்டியுள்ள தாவரங்கள்கூட கருகி வருவதுடன் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்த உப்பனாற்றில் இறங்கி குளித்தாலோ கை, கால் நீரைக் கொண்டு சுத்தம் செய்தாலோ தோளில் ஒருவிதமான அரிப்பு ஏற்படுகிறது என்றும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கொடக்காரமூலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் கூறுகையில், உப்பனாற்றின் குறுக்கே தற்காஸ் கிராமத்தில் உப்புநீர் புகாமல் இருப்பதற்காக கதவனை கட்டப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகிறது.
இதனால் உப்பு நீர் உள்ளே புகுவது தடுக்கப்பட்ட போதிலும். ஆற்றின் கரையோரம் உள்ள இறால் குட்டைகளுக்கு சுமார் 300 அடி ஆழ்துளை இட்டுதண்ணீரை எடுத்து அதனை இறால் குட்டைகளில் பாய்ச்சி இறால் வளர்த்து வருகின்றனர்.
இறால் வளர்ப்பதற்கு பெரிதும் காரணமாக பல்வேறு ரசாயனம் தேவைப்படுகிறது. இந்த ரசாயனத்தை தண்ணீரில் கலக்கின்றனர். இந்தத் தண்ணீர் மாசுபடுகிறது. மாசுபட்ட இந்த தண்ணீர் மீண்டும் மின்மோட்டார்கள் மூலம் உப்பனாற்றுக்குள் வெளியேற்றப்படுகிறது. இதனால் தண்ணீர் மாசடைந்து அங்குள்ள கால்நடைகள் தாகத்தை தீர்ப்பதற்கு தண்ணீர் அருந்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.
இந்த ஆற்றுநீரை குடிக்கும் மாடுகள் மற்றும் ஆடுகள் அடிக்கடி இறக்கின்றன. கடந்த ஒரு மாத காலத்தில் இந்த ஆற்று நீரை பருகிய ஏழு பசு மாடுகள் இறந்துள்ளன. நேற்று முன்தினம் நல்லூர் கிராமத்தைச்சேர்ந்த சிவகுரு என்பவருக்கு சொந்தமான பசுமாடு இந்த ஆற்று நீரை குடித்ததால் இறந்து விட்டது. அப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இறால் குட்டைகள் மூலம் உப்பனாற்றுக்கு ரசாயனம் கலந்த தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீரும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. அப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள இறால் குட்டைகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
மேலும் தற்காஸ் கிராமத்தில் உப்பு நீர் புகாமல் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கதவணையை அங்கு வேலை பார்த்து வரும் நீர்வளத்துறையின் கரை காவலரே இறால் குட்டை உரிமையாளர்களுக்கு ஆதரவாக உப்பு நீரை தினந்தோறும் திறந்து விடும் செயலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் இறால் குட்டைகள் இயங்குவதைஉடனடியாக தடை செய்ய வேண்டும் என்றார்.
