மதுரை அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிகால குகை, பாறை ஓவியம் இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு

மதுரை : மதுரை அருகே ஆதிகால குகை, வெண்சாந்து பாறை ஓவியம் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரையை சேர்ந்த தொல்லியல் கள ஆய்வாளர், பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜேஷ் கண்ணன், பழனி, விக்னேஸ்வரன் ஆகியோர் மதுரை மாவட்டம் பேரையூர் மலைப்பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். இதில் பெருங்கற்காலத்தை சேர்ந்த நீண்ட குகை, வெண்சாந்து பாறை ஓவியம் மற்றும் உருக்காலை எச்சங்கள் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து முனீஸ்வரன் கூறியதாவது: பேரையூர் பாண்டிய, சேர நாட்டிற்கிடையே வணிகப்பாதையில் முக்கியம் இடம் கொண்டிருந்தது. சங்க கால பாண்டிய மன்னன் பேரில் இவ்வூர் கடுங்கோன் மங்கலம் என்றழைக்கப்பட்டு, பின்னாளில் பேரையூர் என மருவியது. பேரையூர் மொட்டமலை மேற்கில் இயற்கையான ஆதி கால குகை இருக்கிறது.

20 அடி நீளம், 7 அடி அகலமிக்க நுழைவு வாயில் அமைப்புடன், உட்புறங்களில் வெள்ளை, செஞ்சாந்து ஓவியங்கள் அழிந்த நிலையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களுடன் இருக்கின்றன. நீரோட்டத்தால் காலப்போக்கில் ஒரு பகுதி அழிந்து, உமை பொந்து என்றழைக்கப்படுகிறது.

ஆதி மனிதர்கள் காட்டு மிருகங்கள் மற்றும் கண்ட காட்சிகளை செஞ்சாந்து, வெண்சாந்து ஓவியங்களாக, குறியீடுகளாக பாறைகளில் வரைந்தனர். செஞ்சாந்து ஓவியம் காலத்தால் முற்பட்டது. வெப்பாலை மரத்திலிருந்து பால் எடுத்து இயற்கையான சுண்ணாம்புக் கல் தோய்த்து கலந்து விரல் மூலம் வெண்சாந்து ஓவியத்தை பாறையில் தீட்டினர்.

மலையின் தெற்கில் கண்டறிந்த வெண்சாந்து பாறை ஓவியம் வேட்டையாடுதல் காட்சியுடன், ஊர்வனங்கள் நகர்வு போன்ற காட்சியும், நீண்ட கழுத்து கொண்ட குச்சி வடிவ மனிதன் நடனமாடும் காட்சி, குறியீடுகளும் வரையப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

மொட்டமலையைச் சுற்றிய பல்வேறு இடங்களிலும் பரந்த பகுதியில் இரும்பு உருக்காலை எச்சங்கள் இருக்கின்றன. இரும்பு உருக்கு கழிவுகளுடன், பல துண்டு குழாய்களும் மேற்பரப்பில் கிடைக்கின்றன. சுடுமண் குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற்றுக் கிடக்கின்றன. இரும்பு உருக்கும் உலைகளை எரியூட்டுவதற்காக குழாய்கள் மூலம் காற்றைக் கொண்டு போக இவ்வமைப்பை பயன்படுத்தியிருக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: