சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் அம்மாபேட்டையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டம் கைவிடப்படுமா?

பவானி : அம்மாபேட்டை பேரூராட்சி, அந்தோணிபுரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் திட மற்றும் திரவ கழிவுகள், மலக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் ரூ.8.14 கோடியில் கழிவு நீர் மற்றும் மலக்கழிவுகள் சேமித்து சுத்திகரித்து வெளியேற்றும் திட்டம், 9-வது வார்டு, அந்தோணிபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு, 50 சதவீதம் ஒன்றிய அரசு நிதியும், 33 சதவீதம் தமிழ்நாடு அரசு நிதியும், 17 சதவீதம் அம்மாபேட்டை பேரூராட்சி நிதியும் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம், பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இத்திட்டத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இத்திட்டத்தில், பாலமலை அடிவாரத்தில் அந்தோணிபுரம் பகுதியில் பெரிய தொட்டி கட்டி, கழிவுகள் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுவதாக தெரிகிறது.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நீர்நிலைகள் மாசடைந்து, விவசாயம் பாதிக்கப்படும், மேலும், காற்று மாசடைந்து பொதுமக்களுக்கு ஆஸ்துமா, தோல் வியாதிகள் ஏற்படும் என அந்தோணிபுரம், ஏரி தோட்டம், மூணாஞ்சாவடி, கடுமாங்கொட்டாய், கோலக்காரனூர், அண்ணா சாலை, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் நீர் நிலைகள், நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்திருந்தனர்.எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி எம்எல்ஏவுமான கே.சிகருப்பணன், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படும் பகுதியை நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், பொதுமக்கள் எதிர்ப்பு மீறி இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அம்மாப்பேட்டை பேரூராட்சி மக்களின் நலனுக்காக இத்திட்டத்தை உடனடியாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.

நிறைவேற்ற தீவிர முயற்சி

திட மற்றும் திரவ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எவ்வித இடையூறுகள் வந்தாலும் நிறைவேற்றியே தீருவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, எதிர்ப்பு தெரிவிப்பவர்களை காவல்துறை மூலம் கைது செய்து, எப்படியேனும் திட்டத்தை தடையின்று நிறைவேற்ற வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முடிவை கைவிட தீர்மானம்

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பேரூராட்சியின் பங்காக ரூ.1.04 கோடி வழங்கினால், பேரூராட்சி பகுதியில் வழக்கமான மேம்பாடு, பராமரிப்பு பணிகள் முடங்கும் நிலை ஏற்படும். கருத்துக் கேட்பு, ஒப்புதல் பெறாமல் வலுக்கட்டாயமாக இத்திட்டம் திணிக்கப்பட்டுள்ளது. மலக்கழிவு மேலாண்மைக்கு தேவையான குறைந்தபட்ச அளவு சேகரிக்க இயலாது.

திடக்கழிவு மேலாண்மையில் மறுசுழற்சி செய்த நீரை விவசாயத்திற்கோ, குளம், குட்டைகளில் தேக்கவோ வாய்ப்புகள் இல்லை. 2ம் நிலை பேரூராட்சியான அம்மாபேட்டையில் பொது நிதியிலிருந்து எவ்வித தொகையும் செலுத்த இயலாது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி தெரிவித்துள்ளது.

Related Stories: