*கலெக்டர் வந்தனா கார்க் ஆய்வு
செங்கம் : புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் வந்தனா கார்க் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்படூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது அனைவரும் நன்றாக கல்வி கற்கின்றீர்களா? ஆசிரியர் நடத்தும் பாடங்கள் புரிகின்றனவா? பள்ளியில் வழங்கப்படும் உணவு முறையாக வழங்கப்படுகிறதா? வழங்கக்கூடிய உணவு சுவையாகவும், தரமாகவும் உள்ளதா? என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்களின் மிதிவண்டி நிறுத்துவதற்கு நிழற்கூடம் அமைப்பதற்கும் மற்றும் பள்ளி அருகே சாலையில் வேகத்தடை அமைப்பதற்கும் துறை சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.8.44 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமையலறை கூடம் கட்டும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து கெங்கம்பட்டு நியாய விலை கடையில், பொருட்கள் தரமான வகையில் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், பொருட்கள் இருப்பு குறித்தும், பதிவேடுகளில் பொருட்களின் விவரம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஜப்திகாரியந்தல்- அல்லியந்தல் சாலையை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.5 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் அமைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் காஞ்சி ஊராட்சியில் விவசாயிகளின் நிலத்தில் வேளாண்மைத் துறை சார்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யப்பட்டு வருவதையும், பயறு இயக்கம் திட்டத்தின் கீழ் 2 ஏக்கர் பரப்பளவில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காரப்பட்டு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் வருகை பதிவேடு சரியாக உள்ளதா? அவர்களின் எடை மற்றும் உயரம் குறித்த விவரங்கள் முறையாக அளவிடப்பட்டுள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறனை ஆய்வு செய்தார்.
இதையடுத்து காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், பொது சிகிச்சை பிரிவு, பிரசவ அறை உள்ளிட்ட பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, மருந்தகத்தில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு வந்திருந்தபொது, மக்களிடம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கனிவுடன் அணுகுகிறார்களா? என கேட்டறிந்தார்.
தொடர்ந்து காரப்பட்டில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், புதுப்பாளையம் பேரூராட்சியில் ரூ.4 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கோண்டு பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.அப்போது தாசில்தார் முருகன். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
