*மாணவ, மாணவிகள் தவிப்பு
கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் ஒன்றியம், லாடவரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் லாடவரம், கார்கோணம், ஆர்ப்பாக்கம், சீட்டம்பட்டு, சாலையனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
மேலும், பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இல்லாததால், கோயில் வளாகத்தில் படித்து வந்தனர். கடந்த திமுக ஆட்சியில் ரூ.1.28 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கட்டிடத்தை கோடை விழாவிற்கு ஜவ்வாது மலை வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் பணிகள் முழுமையடையாமல், அடிப்படை வசதிகளின்றி இருந்த கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் திறந்து வைத்தனர்.
தற்போது சாலை வசதி, சமையலறை, விளையாட்டு மைதானம், சுற்றுசுவர், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் புதிய பள்ளி கட்டிடத்திற்கு மாணவர்கள் செல்லவில்லை. தற்போதும் மாணவர்கள் பள்ளி அருகாமையில் உள்ள கோயில் வளாகத்தில் அமர்ந்து கல்வி கற்கின்றனர்.
பணிகள் முழுமையாக முடிவடையாமல் பள்ளி கட்டிடம் திறந்தும் பயனில்லை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து, மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
