*திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
மணப்பாறை : வாரிசு சான்றிதழ் பரிந்துரைக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளரை திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் வடக்கு, அரசங்குலம் பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர், தனது தந்தை பெயரில் வாரிசு சான்றிதழ் கேட்டு மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பத்திருந்தார். இந்த விண்ணப்பத்தினை பரிந்துரை செய்ய வீ.பெரியப்பட்டி பிர்கா, முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஹேமலதா (36), தனக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஈஸ்வரி, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆலோசனை பேரில் ரசாயண தடவிய ரூ.4ஆயிரத்துடன் நேற்று மதியம் தாலுகா அலுவலகம் சென்ற ஈஸ்வரி, அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் ஹேமலதாவிடம் கொடுத்தார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் தாலுகா அலுவலத்திற்குள் புகுந்து ஹேமலதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பொதுமக்கள் அளிக்கும் புகாரின் உண்மை தன்மையை ஆராய்ந்து லஞ்சஒழிப்பு துறை துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மக்கள் எந்தவித அச்சமின்றி புகார் அளித்து வருகின்றனர்.
குறிப்பாக, சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இருந்தும், அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் டிஎஸ்பி மணிகண்டனின் செல்போன் எண்ணுக்கு 94981-57799 புகார் அளிக்கலாம். வாட்ஸ் அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம். புகாரின் உண்மை தன்மையை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்சஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
நாகையில் ஊராட்சி செயலர் கைது
நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜீ. இவர் தேமங்கலம் ஊராட்சியில் அரசு பணிக்காக ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி பணி மேற்கொண்டு வருகிறார். பணிகள் முடிந்த பிறகு அதற்கான தொகையை பெற ஆவணங்களை சமர்ப்பித்தார்.
ஆனால் அந்த தொகையை வழங்குவதற்கு ஊராட்சி செயலர் மோகன் (38), ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.இதுதொடர்பாக ராஜீ நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.
போலீசார் ஆலோசனை பேரில் ரசாயண தடவிய ரூ.4ஆயிரத்துடன் நேற்று மதியம் ஊராட்சி அலுவலகம் சென்ற ராஜீ, அங்கிருந்த ஊராட்சி செயலர் மோகனிடம் கொடுத்தார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் மோகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
