*டாக்டர்கள் எச்சரிக்கை; அதிகாரிகள் ஆய்வுக்கு மக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் : சுத்திகரிக்கப்படாமல் விற்பனை செய்யப்படும் போலி குடிநீர் கேன்களால் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு நடத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பல்வேறு இடங்களில் போலி ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் போலி உணவு பாதுகாப்புத்துறை (எப்எஸ்எஸ்ஐ) உரிம எண்களை பயன்படுத்தி, தரம் இல்லாத போலி குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.
கோடைக்காலம் மட்டுமின்றி விசேஷ காலங்களிலும் குடிநீருக்கான தேவை அதிகரிப்பை பயன்படுத்தி, சில சட்டவிரோத நிறுவனங்கள் பொதுமக்களின் உயிரோடு விளையாடி வருகின்றன.
எனவே அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் உற்பத்தி ஆலைகள், மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனைகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் போலி குடிநீர் கேன்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரிகள் மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் பேக்கிங் செய்யும் நிறுவனங்களும் பிஐஎஸ் அமைப்பிடம் இருந்து பெற்ற தகுதியான ஐஎஸ்ஐ உரிமம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் (எப்எஸ்எஸ்ஐ) முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
அனுமதியின்றி போலி லேபிள்களை ஒட்டி, தரம் குறைந்த நிலத்தடி நீரையோ அல்லது குழாய் நீரையோ பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆலைகளுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும்.
போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் மீது இந்திய தர நிர்ணய சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை பாயும்.
மேலும், போலி நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலைக்கு குடிநீர் பாட்டில்களை வாங்கி விற்கும் சில்லறை வியாபாரிகள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்நிலையில் முறையாக சுத்திகரிக்கப்படாத மற்றும் போலி குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘போலி குடிநீரில் ஈ-கோலை போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, மற்றும் காலரா போன்ற நீர்வழித் தொற்று நோய்கள் உடனடியாக ஏற்படும்.
அசுத்தமான தண்ணீரை நேரடியாக பருகுவதால் டைபாய்டு காய்ச்சல் மற்றும் கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதற்கான ஆபத்து மிக அதிகம். மேலும், போலி குடிநீர் தயாரிப்பில் தரம் குறைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சூரிய வெளிச்சத்தில் இவை நீண்ட நேரம் வைக்கப்படும் போது, பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு ரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் தண்ணீரில் கலந்து, நாளடைவில் குடல் புண் மற்றும் புற்றுநோய் போன்ற மிகக் கடுமையான நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சுத்திகரிக்கப்படாத தண்ணீரில் ஆர்சனிக், காரீயம் மற்றும் அதிகப்படியான தாதுக்கள் இருக்க வாய்ப்புள்ளதால், இவை மனித உடலில் உள்ள சிறுநீரகங்களை செயலிழக்க செய்யக்கூடும்’ என எச்சரிக்கின்றனர்.
புகார் அளிப்பது எப்படி?
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் மத்திய அரசின் ‘பிஸ் கேர் ஆப்’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, பாட்டிலில் உள்ள உரிம எண்ணை பதிவிட்டால், அந்த நிறுவனம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நொடியில் கண்டறியலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி குடிநீர் ஆலைகள் இயங்குவது தெரிந்தாலோ அல்லது கடைகளில் போலி குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டாலோ பொதுமக்கள் அச்சமின்றி உடனடியாக புகார் அளிக்கலாம்.
உணவு பாதுகாப்புத்துறையின் மாநில அளவிலான வாட்ஸ்அப் புகார் எண் 94440 42322 என்ற எண்ணிற்கோ அல்லது பிஸ் கேர் ஆப் மூலமாகவோ ஆன்லைனில் ஆதாரங்களுடன் புகார் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த போலி குடிநீர் மாபியாவை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை
பொதுமக்கள் தாங்கள் வாங்கும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்கள் உண்மையானவைதானா என்பதை உறுதிப்படுத்துவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி பாட்டிலின் மூடி மற்றும் லேபிளில் ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை (எப்எஸ்எஸ்ஐ) எண் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பேட்ச் எண் இல்லாத பாட்டில்களை வாங்க வேண்டாம். போலி பாட்டில்களில் பிரபல பிராண்டுகளின் பெயர்கள் எழுத்து பிழையுடன் அச்சிடப்பட்டிருக்கும்.
