நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம் விண்ணப்பங்கள் சட்டப்படி பரிசீலிக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் தகவல்

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நியமனங்களுக்கு தவெக கட்சி நிர்வாகிகள் ஐந்து லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று நியமனங்ககளை செய்து வருவதாக விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.ஞானசவுந்தரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், தவெக கடலூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட கலெக்டர், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த், முதல்வர் விஜய் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்திருந்தார். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பாணைக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்தபோது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆனந்த் ஆகியோர் தேவையில்லாமல் சேரக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவை சட்டப்படி பரிசீலிக்கப்பட்டுவருகிறது. மனுதாரார் பெயரும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தி தாள்களில் தலைப்புச் செய்தியாக வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருக்கலாம் என கூறிய நீதிபதி, தற்காலிக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் திமுக மற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக மனுதாரரே கூறும் நிலையில், இதில் எப்படி பாரபட்சம் காட்டப்பட்டது. இது அனைத்தும் நியாயமாக நடைபெறுவதையே காட்டுகிறது என்றார்.

இதையடுத்து, முதலமைச்சர், அமைச்சர், மாவட செயலாளர் பெயர்களை நீக்க மனுதாரர் தரப்பில் உத்தரவாரதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று, அவர்களின் பெயர்களை வழக்கிலிருந்து நீக்கிய நீதிபதி, அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரின் விளக்கத்தை பதிவுசெய்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: