கரூர் நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியதை எதிர்த்த வழக்கு வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சூளையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பிரபாகரன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு 10 லட்சம் ரூபாயும், தவெக சார்பில் 20 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் உள்ளபோது வேலை வழங்குவது, சாட்சியத்தை மாற்றிக் கொடுக்க நிர்பந்திக்கும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Related Stories: