முன்அனுமதியின்றி வெளிநாடு சென்றதாக குற்றச்சாட்டு அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனிடம் ஒன்றிய அரசு விளக்கம் கோரி நோட்டீஸ்: ஐஏஎஸ் அதிகாரிகள் அரசை சரியாக வழி நடத்துகிறார்களா என்று கேள்வி

சென்னை: ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றதாக தமிழக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் கீர்த்தனாவுக்கு ஒன்றிய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளனர்.

பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, ஒன்றிய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியை பெற வேண்டும் என்பது கட்டாய விதியாகும். இத்தகைய பயணங்களின்போது அவர்கள் கட்டாயமாக ‘டிப்ளமேடிக் பாஸ்போர்ட்’ மூலமாகவே பயணிக்க வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.

ஆனால், தற்போது தமிழகத்தை சேர்ந்த அந்த 2 அமைச்சர்களுமே ஒன்றிய அரசின் எவ்வித முன்அனுமதியையும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, அவர்கள் தங்களுக்குரிய ‘டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை’ பயன்படுத்தாமல், தங்களுடைய சொந்த பாஸ்போர்ட் மூலமாகவே வெளிநாடு சென்று வந்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும், நாட்டின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த விதிமீறலை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான குற்றச்சாட்டாக கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் முறையான அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுடைய கடமையை சரியாக செய்யவில்லை என்றும், அரசை முறையாக அவர்கள் வழிநடத்த தவறிவிட்டனர் என்றும் ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி கூறும்போது, அமைச்சராக இருப்பவர்கள், வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் சென்றால், ஒன்றிய உள்துறை அமைச்சக அனுமதியுடன், ‘டிப்ளமேடிக் பாஸ்போர்ட்’ பெற்று தான் செல்ல வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் இரண்டு அமைச்சர்கள், ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு சொல்லாமல் வெளிநாடு சென்று உள்ளனர். அதிலும், அதிகாரிகளுடன் சென்றது தான் வேடிக்கையான விஷயம். எனவே, ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: