விருதுநகர்: தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் லாக்கப் மரணங்களால் பெரும் களங்கம் ஏற்படுவதாக மாணிக்கம்தாகூர் எம்பி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்தாகூர் எம்பி, விருதுநகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகதாது அணைத் திட்டம் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை பாதித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரை தடுத்து நிறுத்தக்கூடிய திட்டமாகும்.
கர்நாடகாவில் உள்ள பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் அணை கட்டுவோம் என்றுதான் பேசுவார்கள். ஆனால், நாம் அரசியல் வேறுபாடுகளை கடந்து ‘டீம் தமிழ்நாடு’ என்ற ஒற்றைக் குரலில் டெல்லிக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திற்குள் 5க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதே? அதுபற்றி விஜய் ஏன் மவுனம் காக்கிறார் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
ஒன்றிய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட 5 ஏழை குழந்தைகளின் மரணத்திற்கு இதுவரை வாயே திறக்கவில்லை. பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு இவ்வளவு சுயநலமாக பேசக் கூடாது. கோவை, சேலம், தர்மபுரி என நம் வீட்டுப் பிள்ளைகள் இறந்து கிடக்கும்போது, அதற்குக் காரணமான நீட் தேர்வை ஒழிக்க வழியில்லாத மோடி அரசின் அமைச்சர் அவர்.
அதேநேரத்தில், தமிழகத்தில் நடக்கும் லாக்கப் மரணங்கள் என்பவை ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அரசுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்துபவை. இது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே தொடரும் ஒரு கட்டமைப்பு பிரச்னை. சில அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் ஒட்டுமொத்த துறையும் பாதிக்கப்படுகிறது. காவல்துறை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். எல்.முருகன் முதலில் டெல்லியால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்விற்குப் பதில் சொல்லிவிட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இல்லங்களுக்குச் சென்று ஆறுதல் கூறட்டும். இவ்வாறு தெரிவித்தார்.
