சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவில் குதிரைபேரம் நடந்துள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த இடத்திற்கு நேரில் சென்றதால் முதலமைச்சர் விஜய் தான் குற்றவாளி என அதிமுக எம்பி இன்பதுரை தெரிவித்தார். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவில் குதிரைபேரம் நடந்துள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு காவல்துறை தலைவர் மகேஷ்குமார் அகர்வாலை நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.பி. இன்பதுரை ஆகியோர் சந்தித்து புகார் அளித்தனர். அதன் பிறகு அதிமுக எம்பி இன்பதுரை நிருபர்களிடம் பேசியதாவது: அதிமுக எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்தில் பேரவை தலைவரிடம் காலை 11 மணிக்கு தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார்கள். அன்றைய தினமே 11.15 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சருடைய அறையிலேயே அவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது.
அதன் பிறகு பேரவை தலைவர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு முரணானது. பழனி கோயில் விவகாரத்தில் பத்திரப்பதிவு நடந்தது உண்மை. அங்கு தவறு நடந்து விட்டதாகவே தான் அமைச்சர் சொல்லிவிட்டாரே. அப்படி இருக்கும் போது. அது தொடர்பாக கருத்து தெரிவித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தான் போட முடியும், காவல்துறையில் புகார் அளித்து, அடியாட்கள் போல் போலீசாரை பயன்படுத்த முடியாது.
அது அவதூறு வழக்கு என்றால், யார் மீது அவதூறு? அமைச்சர் மீது அவதூறு என்றால், அமைச்சர் தான் புகார் அளிக்க முடியும், அவரது உதவியாளர் புகார் அளிக்க முடியாது. குதிரை பேரம் நடக்கவே இல்லை என்று சொல்கிறார். குதிரை பேரம் நடந்துள்ளதாக ஒரு வழக்கு திருவல்லிக்கேணியில் நடந்து வருகிறது. இதில் பத்திரிகையாளரை கூட விசாரணை நடத்தி இருக்கிறார்கள். குதிரை பேரம் யாரை பேசினார்கள். தவெக எம்எல்ஏவிடம் பேசினார்கள் என்று தான் திருவல்லிக்கேணியில் காவல்துறையின் வழக்கு. அந்த வழக்கை எப்படி தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கும்.
குதிரை பேரம் எந்த வடிவில் நடந்தாலும், அதை விசாரிப்பது தூய அரசாங்கம். அப்புறம் ஏன் பயப்படுகிறீர்கள், எங்கள் வழக்கை மட்டும் விசாரிக்கவே இல்லை என்பதுதான் எங்கள் கேள்வி. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை நாங்கள் கொடுத்த புகாரில் முதல் விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதுவரை நடத்தப்பட வில்லை. எந்தவித தகவலும் கொடுக்கவில்லை. அதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. அதற்கு முன்பாக மாநிலத்தின் தலைமை அதிகாரி என்பதால் நாங்கள் டிஜிபியிடம் புகார் அளித்து இருக்கோம்.
இதில் யார் குற்றவாளி என்றால் முதலமைச்சர் விஜய் தான் குற்றவாளி. ஏன் என்றால் அவர் தான் அதிமுக எம்எல்ஏக்கள் குழுமியிருந்த ஒரு இடத்திற்கு நேரில் சென்றார். அவர் போனார். அவர் அங்கு சில சைகைகளை காண்பித்தார். சில ஆசை வார்த்தைகள் கூறினார் என்று கூறப்படுகிறது. இதை எல்லாம் யார் விசாரிக்க வேண்டும் என்றால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும். அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
அங்கு இருந்தவர்கள் செல்போன்கள் எல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். அதுமட்டும் இல்லாமல் முதலமைச்சரின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு மர்ம நபர் ஒருவர் முகத்தில் துண்டை போட்டு சென்றார், அது எல்லாம் விசாரிக்க வேண்டும். குதிரை பேரத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும். தூய சக்தியான ஆட்சி, தவெக அரசு மீது குற்றச்சாட்டு இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
தூய சக்தி என்றால் குதிரை பேர வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். குதிரை பேரம் குறித்து நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு, உரிய அதிகாரிகளிடம் மனு கொடுக்க வேண்டும். அதன்படி கவர்னரிடம் புகார் அளித்து இருக்கோம். அதுதொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்து இருக்கோம்.
அந்த அமைப்பு செயல்படாத போது அந்த அமைப்பின் தலைவரான டிஜிபியிடம் புகார் கொடுத்து இருக்கிறோம். இவர்கள் யாரும் செயல்படாத போது நாங்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். நிச்சயம் நீதிமன்றம் அதில் தலையிடும். அதுகுறித்து நாங்களும் நீதிமன்றத்தில் சொல்வோம். இவ்வாறு எம்.பி. இன்பதுரை கூறினார்.
