குதிரை பேரம் பேசியதாக பதிவான வழக்கு சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவை மீண்டும் விசாரிக்க கோரிக்கை: உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: ஊத்தங்கரை எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும், தங்களிடம் குதிரை பேரம் பேசப்பட்டதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரிக்குமாறும் சிபிஐக்கு உத்தரவிடக் கோரியும், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெ.பாலசுப்பிரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், திங்கட்கிழமை வாதங்கள் முன் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் முறையீடு செய்தார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள வழக்கில் மீண்டும் வாதங்கள் முன் வைக்க அனுமதிக்க முடியாது. நேற்று சில அலுவல்கள் காரணமாக தீர்ப்பளிக்க இயலவில்லை. இன்று (நேற்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி மனுதாரர் தரப்பு கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

Related Stories: