மயிலம் அருகே விஏஓவை கத்தியை காட்டி மிரட்டி தங்க செயின், மொபைல் போன் பறிப்பு: போலீசார் விசாரணை

 

மயிலம், ஜூலை 15: விஏஓவை கத்தியை காட்டி மிரட்டி தங்க செயின், மொபைல் போனை பறித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்துள்ள செண்டூர், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் கொல்லியங்குனம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவர், நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் பணி நிமித்தமாக விழுப்புரம் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது அவர் மயிலம் அடுத்துள்ள விளங்கம்பாடி சர்வீஸ் சாலையில் வந்தபோது திடீரென்று 2 பைக்குகளில் வந்த 4 பேர், கிராம நிர்வாக அலுவலர் அருள்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Related Stories: