ஈரோடு: ஈரோடு கதிரம்பட்டி கங்கா கார்டனை சேர்ந்த தனியார் கார் கம்பெனி விற்பனை பிரதிநிதியின் மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். ஈரோடு மோளகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் முத்து ராஜா (30). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கூடைப்பந்து பயிற்சியாளராகவும் உள்ளார். இவரிடம், சிறுவனை கூடைப்பந்து பயிற்சிக்கு சேர்த்தனர்.
பயிற்சிக்கு மகனை அழைத்து சென்ற இடத்தில் முத்துராஜாவுக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் நெருங்கி பழகினர். இது கார் கம்பெனி விற்பனை பிரதிநிதிக்கு தெரியவந்தது. இந்நிலையில், 11 வயது மகனை பயிற்சியின் போது பாலியல் ரீதியான எண்ணத்துடன் முத்துராஜா, தொட்டதாக அவர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதற்கு உடந்தையாக முத்துராஜாவின் நண்பரான ஈரோடு ஈ.பி.பி. நகர் நியூராம் நகரை சேர்ந்த வினோத் (29) மற்றும் தனது மனைவி இருந்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார்.
வினோத்தும், முத்துராஜா பணியாற்றும் அதே மருத்துவமனையில் மனித வள பிரிவில் பணியாற்றுகிறார். இதுகுறித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக முத்துராஜா மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக வினோத் மற்றும் சிறுவனின் தாய் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
