சென்னை: ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று வர்ணிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88), உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு 7.30 மணிக்கு மைசூரில் காலமானார். அவரது பேரிழப்பு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அனைத்து தரப்பு ரசிகர்களாலும், திரையுலகினராலும் வர்ணிக்கப்பட்டவர், பாலிவுட்டின் பிரபல பாடகியாக இருந்து மறைந்த லதா மங்கேஷ்கர்.
அதுபோல், ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்ற புகழுக்கு சொந்தக்காரராக இருந்தவர், பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கும் அவர், நிறைய பாடல்களை தானே எழுதி இசை அமைத்து பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளை 4 முறை பெற்றுள்ளார்.
கடந்த 1938ல் ஆந்திராவிலுள்ள குண்டூர் மாவட்டம் பள்ளபட்லா என்ற ஊரில், தெலுங்கு பிராமண குடும்பத்தை சேர்ந்த ராமமூர்த்தி, சத்தியவதி தம்பதியின் மகளாக பிறந்த எஸ்.ஜானகி, சிறுவயதிலேயே பாட தொடங்கிவிட்டார். 3 வயது முதல் 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது அவருக்கு வயது 9. நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். வி.சந்திரசேகர் நடத்திய மேடை நாடக இடைவேளைகளில் எஸ்.ஜானகி முதல்முறையாக பாடினார்.
1956ல் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டு போட்டியில் பங்கேற்று 2வது பரிசு பெற்ற அவர், பிறகு சென்னைக்கு வந்தார். ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக நியமிக்கப்பட்டார். 1957ல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில், ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான எஸ்.ஜானகி, இப்பாடல் வெளியான மறுநாளே தெலுங்கில் ‘எம்.எல்.ஏ’ என்ற படத்தில் ‘நீயாசா அடியார்’ என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதையடுத்து அவருக்கு நிறைய படங்களில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. முதல் ஆண்டிலேயே 6 மொழிகளில் 100 பாடல்களை பாடி முடித்த எஸ்.ஜானகி, கடந்த 1957ல் இருந்து தமிழ் மொழியில் பாட தொடங்கினார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜப்பான், ஜெர்மன், படுகா, பஞ்சாபி உள்பட இன்னும் சில மொழிகளிலும் அவர் பாடியிருக்கிறார்.
17 மொழிகளுக்கும் மேல் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்ற அவர், இது ஒரு பெரிய சாதனை இல்லை என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார். கடந்த 1992ல் இலங்கையில் நடந்த ஒரு விழாவில் அவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பக்தி பாடல்களை தானே எழுதி இசை அமைத்து பாடியிருக்கிறார். ‘மௌன போராட்டம்’ என்ற தெலுங்கு படத்துக்கு முதன்முதலில் அவர் இசை அமைத்தார். எஸ்.ஜானகியின் கணவர் ராம் பிரசாத் காலமாகிவிட்டார்.
தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வசித்து வந்த எஸ்.ஜானகி, ‘இனிமேல் சினிமாவில் பாட மாட்டேன்’ என்று ஒரு இசை நிகழ்ச்சியில் அறிவித்துவிட்டு, ஐதராபாத்துக்கு சென்று ஓய்வெடுத்தார். அவரது ஒரே மகன் முரளி கிருஷ்ணா திரைப்படங்களில் பாடவில்லை என்றாலும், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். அவரும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 22ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் எஸ்.ஜானகி மிகவும் கவலையுடன் காணப்பட்டார்.
கடந்த 2014ல் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில், நடிகர் தனுஷுடன் இணைந்து, ‘அம்மா அம்மா’ ௭ன்ற பாடலை பாடிய எஸ்.ஜானகி, தொடர்ந்து ‘பேபி’ என்ற படத்தில் பாடினார். ‘திருநாள்’ என்ற படத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘தந்தையும் யாரோ… தாயாரும் யாரோ’ என்ற பாடலை பாடினார். கடந்த 1986ல் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருது, கடந்த 2002ல் கேரள அரசு வழங்கிய சிறப்பு விருது மற்றும் 4 முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது பெற்றுள்ள எஸ்.ஜானகி, பத்மபூஷண் விருது வாங்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, கடந்த 2013ல் தனக்கு கொடுப்பதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்த பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்த அவர், இந்த விருது தனது 55 ஆண்டு கால அனுபவத்துக்கு மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது ௭ன்று சொன்னார்! அவரது கருத்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த 1980ல் மலையாள படத்துக்கும், கடந்த 1984ல் தெலுங்கு படத்துக்கும் தேசிய விருது பெற்றுள்ள எஸ்.ஜானகி, 14 முறை கேரள அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும், 7 முறை தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும், 10 முறை ஆந்திர அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதும் பெற்றுள்ளார்.
கடந்த 1976ல் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த ‘16 வயதினிலே’ என்ற படத்தில் பாடியிருந்த ‘செந்தூரப் பூவே செந்தூரப் பூவே’, கடந்த 1980ல் ‘ஒப்போல்’ என்ற படத்தில் பாடியிருந்த ‘௭ட்டுமனூரம்பழத்தி’, கடந்த 1984ல் ‘சித்தாரா’ என்ற படத்தில் பாடியிருந்த ‘வென்னெல்லோ கோடாரி அந்தம்’, கடந்த 1992ல் ‘தேவர் மகன்’ என்ற படத்தில் பாடியிருந்த ‘இஞ்சி இடுப்பழகா’ ஆகிய பாடல்களுக்காக எஸ்.ஜானகி தேசிய விருது பெற்றார்.
தவிர, 1962ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் வெளியான ‘கொஞ்சும் சலங்கை’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல், தமிழ் படவுலகில் எஸ்.ஜானகியின் முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது. தொழில்நுட்பம் வளராத அக்காலத்தில், இப்பாடல் 2 இடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மும்பையில் இருந்த தயாரிப்பாளர் ராமன் ஸ்டுடியோவில் எஸ்.ஜானகி பாட, இப்பாடலுடன் இணைந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசையை, நாதஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் சென்னையிலுள்ள ஸ்டுடியோவில் வாசித்து, அது 2 டிராக்கில் பதிவு செய்து, பிறகு ஒலிக்கலவை என்கிற மிக்ஸிங் முறை மேற்கொள்ளப்பட்டது.
இப்பாடல் எஸ்.ஜானகியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இசைத்தட்டு விற்பனையிலும் மாபெரும் சாதனை படைத்தது. அனைத்து இசை அமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து முன்னணி பின்னணி பாடகர்களுடனும் இணைந்து அவர் பாடினார். இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி என்ற கூட்டணி, தென்னிந்திய படவுலகம் மற்றும் இசைத்துறையில் தனி முத்திரையை பதித்தது.
பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்றவகையில் குரலை மாற்றி பாடக்கூடிய எஸ்.ஜானகி, குழந்தை போல் மழலைக்குரலில் பாடுவதிலும் வல்லவர். கே.பாக்யராஜ் இயக்கி நடித்த `மௌன கீதங்கள்’ என்ற படத்தில், ‘டாடி.. டாடி.. ஓ மை டாடி… உன்னை கண்டாலே ஆனந்தமே’ என்ற பாடலை கேட்கும்போது உற்சாகம் பொங்கும். காரணம், அவரது துள்ளலான மழலைக்குரல்.
குழந்தையின் குரலா? குமரியின் குரலா? காதலியின் ஏக்கமா? காதலனோடு கிறக்கமா? `பழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனப்புடா’ என்று பாடும் கிழவியின் வசனமா? இப்படி எல்லாவிதமான உணர்ச்சிகளையும் தனது குரலில் எளிதில் கொண்டு வரக்கூடிய திறமை பெற்ற எஸ்.ஜானகி, தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய படவுலக இசை அமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்து பல்வேறு சாதனைகள் படைத்தார்.
அவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’ உள்பட பல பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாதவை. எஸ்.ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணி பாடகியான பிறகு இசைக்கான எந்தவொரு பயிற்சியையும் அவர் பெறவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட முயற்சியினாலும், அது எந்த மொழி பாடலாக இருந்தாலும், அந்த மொழிக்கே உரிய தன்மைகளுடன், அந்த மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தி வந்தார்.
அதனால்தான் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்தது மட்டுமின்றி, காலத்தால் அழியாத பல வெற்றிப் பாடல்களை அவரால் கொடுக்க முடிந்தது. பாடல்களில் இடம்பெறும் ஹம்மிங்கில், பல்வேறு மாயாஜாலங்கள் செய்துள்ளார் எஸ்.ஜானகி. ல, லா வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்கள் நிறைய இருக்கின்றன. ‘லல்லா லல்லா லல்லா லல்லா…
சின்ன சின்ன வண்ணக்குயில்’ (மெளன ராகம்), ‘லால லால ல… ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது’ (கிராமத்து அத்தியாயம்), ‘லாலலல்லா லாலலல்லா… எந்த பூவிலும் வாசம் உண்டு’ (முரட்டுக்காளை) என்று, பல்வேறு பாடல்களை உதாரணமாக சொல்லலாம். ‘எனது ரசிகர்கள்தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது’ என்று எஸ்.ஜானகி அடிக்கடி பெருமையுடன் சொல்லி மகிழ்வார்.
* 4 தலைமுறையினருடன் பயணம்
திரையுலகில் 4 தலைமுறை பின்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார், எஸ்.ஜானகி. கண்டசாலா, டி.எம்.சவுந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.யேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சீர்காழி கோவிந்தராஜன், இளையராஜா, மனோ, உன்னி மேனன், உன்னி கிருஷ்ணன், சங்கர் மகாதேவன், ஹரிஹரன் உள்பட பலருடன் இணைந்து பாடிய அவர், ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில் தனுஷூடன் இணைந்து ‘அம்மா அம்மா’ என்ற பாடலை பாடினார்.
* எஸ்.ஜானகியின் கடைசி பாடல்
ஓடிக்கொண்டே இருக்க விரும்பாமல், சொந்த வாழ்க்கையில் ஓய்வெடுக்க விரும்பிய எஸ்.ஜானகி, ‘10 கல்பனகள்’ என்ற மலையாள படத்துக்காக பாடிய ‘அம்மபூவினு’ என்ற பாடல்தான் கடைசி பாடலாகும். ஓய்வெடுக்கும் தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், ‘எனது கடைசி பாடல் மலையாள மொழியில்தான் இருக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் திட்டமிடவில்லை. நான் ஓய்வெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த நேரத்தில், அந்த சந்தர்ப்பம் தானாக வந்து அமைந்தது’ என்றார்.
* மிகவும் கடினமான பாடல்
இதுவரை தான் பாடியுள்ள பாடல்களில், பாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்த பாடலாக எஸ்.ஜானகி சொன்னது, ‘ஹேமாவதி’ என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘சிவ சிவ என்னாட’ என்ற பாடலாகும். எல்.வைத்தியநாதன் இசை அமைத்த இப்பாடல், தோடி மற்றும் அபோகி ராகத்தில் அமைந்தது. இதை பாடுவதற்கு முன்பு எஸ்.ஜானகி, பாடல் நன்றாக வரவேண்டும் என்று இறைவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார்.
* இளையராஜா அறிமுகமான படத்துக்கு பாடிய எஸ்.ஜானகி
இதுவரை 48,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்.ஜானகி, கவிஞர் கண்ணதாசன் எழுதிய ’பூஜைக்கு வந்த மலரே வா’ என்ற பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இசையில் ’பாத காணிக்கை’ என்ற படத்துக்காக பாடினார். ’சுமைதாங்கி’ என்ற படத்துக்காக பி.பி.ஸ்ரீனிவாஸுடன் இணைந்து ’எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன’, ’ஆலயமணி’ என்ற படத்தில் ‘தூக்கம் உன் கண்களை’, ’போலீஸ்காரன் மகள்’ என்ற படத்தில் ’இந்த மன்றத்தில் ஓடி வரும்’ ஆகிய பாடல்களை பாடினார்.
எம்.ஜி.ஆர் நடித்த ’அடிமைப்பெண்’ என்ற படத்தில், ’காலத்தை வென்றவன் நீ’ என்ற பாடலை பி.சுசீலாவுடனும் இணைந்து எஸ்.ஜானகி பாடினார். இதற்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். ’அன்னக்கிளி’ என்ற படத்தில் அறிமுகமான இளையராஜா இசையில், ’மச்சான பாத்தீங்களா’ என்ற பாடலை எஸ்.ஜானகி பாடினார். இதை பஞ்சு அருணாசலம் எழுதினார்.
பாரதிராஜா இயக்கிய ’சிகப்பு ரோஜாக்கள்’ என்ற படத்தில், இளையராஜா இசையில் ’நினைவோ ஒரு பறவை’ என்ற பாடலை கமல்ஹாசனுடன் இணைந்து பாடிய எஸ்.ஜானகி, இளையராஜா இசையில் ’ப்ரியா’ என்ற படத்தில் பஞ்சு அருணாசலம் எழுதிய, ’ஹே… பாடல் ஒன்று’ என்ற பாடலை கே.ஜே.யேசுதாஸுடன் இணைந்து பாடினார்.
’தர்மயுத்தம்’ என்ற படத்தில் ’ஆகாய கங்கை பாடலை’ என்ற பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடினார். இதை எம்.ஜி.வல்லபன் எழுதினார். 1981ம் ஆண்டு ’கிளிஞ்சல்கள்’ என்ற படத்தில் டி.ராஜேந்தர் எழுதி இசை அமைத்த, ’விழிகள் மேடையாம்’ என்ற பாடலை டாக்டர் கல்யாணுடன் இணைந்து பாடிய எஸ்.ஜானகி, பாரதிராஜா இயக்கிய ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் பாடிய எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
