தேசிய கல்வி கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தாதது கவலை அளிக்கிறது: ஆளுநர் அர்லேகர் பேச்சு

சென்னை: தேசிய கல்விக் கொள்கை 2020 மாணவர்களுக்கு பரந்த பார்வையை வழங்கவும், பண்பு நலன்களை உருவாக்கவும், தேச கட்டமைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கவும் கொண்டு வரப்பட்டது. இந்த கொள்கையின் நன்மைகளை முழுமையாக ஆராயாமல், தமிழகத்தில் இதனை அமல்படுத்தாதது கவலை அளிக்கிறது என்று வைஷ்ணவ் கல்லூரியின் 59வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறினார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியின் (தன்னாட்சி) 59வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ள துவாரகா அரங்கில் நடந்தது. விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் பேசியதாவது:

கல்வி என்பது வெறும் கல்விச் சார்ந்த வெற்றியோடு நின்றுவிடக் கூடாது, அது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் பங்களிக்க வேண்டும். மாணவர்கள் தார்மீக விழுமியங்கள், நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் தேசக் கட்டமைப்பில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020 மாணவர்களுக்கு பரந்த பார்வையை வழங்கவும், பண்பு நலன்களை உருவாக்கவும், தேசக் கட்டமைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கவும் கொண்டு வரப்பட்டது.

இருப்பினும், இந்த கொள்கையின் நன்மைகளை முழுமையாக ஆராயாமல், தமிழகத்தில் இதனை அமல்படுத்தாதது கவலையளிக்கிறது. இதன் சாத்தியமான நன்மைகளை ஆக்கப்பூர்வமான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். இந்திய கல்வி முறையை காலனித்துவ ஆதிக்க சிந்தனையிலிருந்து விடுவித்து, இந்தியாவின் ஆன்மிக மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தோடு இணைப்பதே இக்கொள்கையின் சிறப்பம்சமாகும். ​

மாணவர்களிடையே தொழில்முனைவோர் திறன்களை வளர்ப்பதற்காக அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ‘தொழில்முனைவோர் மேம்பாட்டு மையங்கள்’ நிறுவப்பட வேண்டும். பட்டதாரிகள் வேலை தேடுபவர்களாக மட்டுமே இருக்காமல், வேலை வாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாறி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் கூறினார்.

Related Stories: