ஆழ்துளை கிணறு தோண்டும்போது உயரழுத்த மின்கம்பியில் இரும்பு குழாய் உரசி மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளிகள் பலி: மாமல்லபுரத்தில் சோகம்

சென்னை: மாமல்லபுரத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும்போது உயரழுத்த மின்கம்பியில் இரும்பு குழாய் உரசியதில் 4 தொழிலாளர்கள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாகினர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் கெஸ்ட் அவுசில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு தோண்டும் பணியில் கல்பாக்கம் அடுத்த நெய்குப்பியை சேர்ந்த பிளம்பிங் தொழிலாளர்களான பிரபு (22), மாமல்லபுரத்தை சேர்ந்த பாட்ஷா (45), வசந்தபுரியை சேர்ந்த வெங்கடேசன் (33) மற்றும் கடம்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55), காரணை பகுதியை சேர்ந்த பகவான் (33) ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது, 30 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்தவுடன், இரும்பு பைப்பை 5 பிளம்பிங் தொழிலாளர்கள் ஒன்றாக சேர்ந்து மேலே தூக்கியுள்ளனர். அதில், பகவன் என்பவர் அருகில் உள்ள ஒரு குச்சியை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த இரும்பு பைப் எதிர்பாராதவிதமாக அங்குள்ள 11 கேவி உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்களும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியாகினர்.

இதில், அதிர்ஷ்டவசமாக பகவான் உயிர் தப்பினார். இதுகுறித்து, தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்சாரம் பாய்ந்து பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்பி அய்மல் ஜமால், செங்கல்பட்டு ஆர்டிஓ பாலாஜி, மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன்,

திருக்கழுக்குன்றம் தாசில்தார் புஷ்பலதா, திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ், செயற்பொறியாளர் பழனி, உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மாமல்லபுரத்தில் 30 அடி ஆழ்துளை கிணறு தோண்டும் பணியின் போது இரும்பு பைப் மின் கம்பியில் உரசி பிளம்பிங் தொழிலாளர்கள் 4 பேர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: