சென்னை: பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: இந்திய திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் மறைவு அதிக வேதனை அளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி, இசையுலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளார்.
பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உள்பட எண்ணற்ற உயரிய விருதுகளை பெற்றுள்ள அவர், தனது இனிமையான குரல் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக்கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்: பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலாலும், உணர்வுபூர்வமான இசை வெளிப்பாட்டாலும் பல தலைமுறை மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
