சென்னை: முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: வியட்நாம் படகு விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு அனைத்து உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு அதிகாரிகள், டெல்லி தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்திய தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
