வெளிமாநிலங்களுக்கு எம்.சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வெளிமாநிலங்களுக்கு எம்.சாண்ட் கொண்டு செல்ல தற்காலிக தடை விதிக்கலாம் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இது வீடு கட்டும் பொதுமக்கள், கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு மிக முக்கிய மூலப்பொருட்களாக விளங்கும் ஜல்லி மற்றும் மணல் மாற்றுப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு சராசரியாக 1,000 ரூபாய் வரை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு யூனிட் ஜல்லி விலை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், எம்.சாண்ட் விலை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாகவும், பி.சாண்ட் விலை 6,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிமென்ட், கம்பி மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலை உயர்வால், வீடுகளின் ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு திட்டமிட்ட பட்ஜெட்டை தாண்டி அதிகரித்து வருகிறது.  வங்கிக் கடனை நம்பி, தங்களின் ஆயுள் கால சேமிப்பை முதலீடு செய்து சொந்த வீடு கட்ட தொடங்கிய நடுத்தர வர்க்க மக்கள், தற்போது மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் கட்டுக்கடங்காத விலையேற்றம் காரணமாக வேதனையடைந்து வருகின்றனர்.

இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமான தொழில் முடக்கத்தை தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.  இந்நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிமங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை தடை செய்யவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளா, கர்நாடகாவுக்கு கனிமங்களை கொண்டு செல்வதை தடுத்து, தமிழ்நாட்டில் போதுமான அளவில் கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத கனிம சுரங்கம், கனிமம் போக்குவரத்து மற்றும் சேமிப்பு தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: