நெல்லை: உலக யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பு சங்கீத சபாவில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை நேரலை நிகழ்ச்சி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது நடிகர் விஜய் அளித்த வாக்குறுதிகள் முழுமையாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் பிரசாரத்தின் போது பஸ் மீது ஏறி நின்று பாடல்களை பாடியவர். தற்போது முக்கிய மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.
பெண்களுக்கான உரிமை தொகை உயர்த்தப்படவில்லை. இலவச பஸ் பயணத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை. யாருக்கு வாக்களித்தோம் என்பதே மக்களுக்கு தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என விஜய் தெரிவித்தார். ஆனால் தற்போது கீழ்மட்டம் முதல் அமைச்சர்கள் வரை ஊழலில் ஈடுபடுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக அவரது அமைச்சர்களே ஒப்புக்கொள்கின்றனர்.
தமிழகத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு எவ்வித கால அவகாசமும் வழங்க முடியாது. உடனடி பாரபட்சமின்றி நடவடிக்கைதான் தேவை. மக்கள் தங்கள் குறைகளை யாரிடம் கூற வேண்டும் என்பதே தெரியாத நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட முதலமைச்சருக்கு தெரியவில்லை. பிற கட்சிகளின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர அரசியல் மட்டுமே நடக்கிறது. தவெகவில் ஒரே பவர்சென்டர் தான் மட்டும்தான் என விஜய் கூறினார். ஆனால் தவெகவின் மிகப்பெரிய பவர் சென்டராக ஆதவ் அர்ஜூனா செயல்பட்டு வருகிறார். கட்சியில், அதிகாரிகளை ஆட்டிப்படைக்கும் பவர்சென்டராகவும் அவர் உள்ளார்.
தவெகவின் கொள்கை என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேகதாது அணை திட்டம் தேவை இல்லை என்பது பாஜகவின் நிலைப்பாடு. காவிரி விவகாரத்தில் நடுவர்மன்ற தீர்ப்பை பெற்றுத் தந்தது போலவே மேகதாது விவகாரத்திலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு சாதகமான நல்ல முடிவை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
