டிரம்ப்புடன் சந்திப்பு; பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய சசிதரூர் எம்பி: காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை சசிதரூர் எம்பி மீண்டும் பாராட்டியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஈரான் போர் விவகாரத்தில் இந்திய கப்பல்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 மாலுமிகள் பலியானார்கள். இதை தொடர்ந்து ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த பிரதமர் மோடி, இந்த பிரச்னைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி சசிதரூர், மீண்டும் பிரதமர் மோடியை பாராட்டினார். அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவரது சந்திப்பு சிறப்பாக நடந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுபற்றி சசிதரூர் கூறுகையில்,’ இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்து, கட்சி அரசியல் சார்ந்த விவகாரமாகத் திசைதிருப்பப்படுவது வியப்பளிக்கிறது. அமெரிக்க அதிபருடனான பொது மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளில் பிரதமர் மோடி தனது கருத்தைத் தெளிவாகத் தெரிவித்தார். போர்க்காலங்களில், வணிகக் கப்பல்களில் உள்ள குடிமை மாலுமிகள் தாக்குதலுக்கு இலக்காகக் கூடாது என்ற செய்தியைத் தெரிவிப்பது முக்கியம். அவர்கள் வீரர்கள் அல்ல; அந்தச் செய்தியையே பிரதமர் மோடி வலியுறுத்தினார்’ என்றாா்.

காங்கிரஸ் கருத்துக்கு எதிராக பிரதமர் மோடியை பாராட்டிய சசிதரூரை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்த கருத்துகளுக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவர் பவன் கேரா கூறுகையில்,’ எனது மூத்த சகாவான சசி தரூருக்குப் பிரதமர் மோடி மீதுள்ள ஈர்ப்பு, இயல்பான உலகின் எல்லைகளையும் தாண்டிச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. மோடி சொல்லாத விஷயங்களைக் கூட அவரால் இப்போது கேட்க முடிகிறது. மோடி-டிரம்ப் சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவால் மூன்று இந்திய மாலுமிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது குறித்த எந்தக் குறிப்பும் இல்லை .

மேலும் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு நடைபெற்ற முதல் மோடி-டிரம்ப் சந்திப்பு இதுவாகும்; இருப்பினும், வர்த்தக ரீதியான விளைவுகளை ஏற்படுத்துவதாக அச்சுறுத்தி போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தியதாக டிரம்ப் 120-க்கும் மேற்பட்ட முறை கூறிவரும் கூற்றை மோடி எதிர்த்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதே சமயம், அதிகாரப்பூர்வ பதிவில் இடம்பெறாத வலுவான வலியுறுத்தல்கள், உறுதியான மறுப்புகள் மற்றும் சமரசமற்ற ராஜதந்திரம் ஆகியவற்றைத் சசிதரூர் எப்படியோ கேட்டறிந்துள்ளார். ஒருவேளை நம்மில் மற்றவர்கள் சாதாரண மனிதப் புலன்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய மனிதர் மோடியின் பக்தர்களைப் பொறுத்தவரை, அவர் குறைவாகப் பேசப் பேச, அவர்கள் அதிகமாகக் கேட்கிறார்கள்’ என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக சசிதரூர் கூறும்போது,’ உண்மையைச் சொல்லப்போனால், இந்திய மாலுமிகளைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்து, கட்சி அரசியல் சார்ந்த சர்ச்சையாகத் திசைதிருப்பப்படுவது எனக்கு வியப்பளிக்கிறது. இதில் 3 இந்தியர்கள் தங்கள் உயிரை இழந்தனர். நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் குடிமை மாலுமிகள் ஒருபோதும் ராணுவ நடவடிக்கைகளுக்கு இலக்காகக் கூடாது என்ற கொள்கை ஆகியவற்றைப் பற்றியே நான் கருத்து தெரிவித்தேன்.இதில், அரசியல் ஆதாயம் தேடுவதில் சிலர் அதிக ஆர்வம் காட்டினால், அது அவர்களை அதிகம் வெளிப்படுத்துகிறது. இந்தியர்களின் உயிர்கள் மீதான அக்கறை நம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது ‘ என்றாா்.

ராகுல் கருத்துக்கு சசிதரூர் எதிர்கருத்து
சசிதரூர் தெரிவித்த கருத்துகள் ராகுல் காந்தியின் நிலைப்பாட்டிற்கு முரணாக இருப்பதாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில்,’ இது சங்கடமானது. நேற்றுமுன்தினம் ராகுல் காந்தியின் பிறந்தநாள், ஆனால் அவருக்கு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை. அதே விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். மாலுமிகள் விவகாரம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் முன்னிலையில் மிக வலுவாகவும் திறம்படவும் எடுத்துரைத்தார் என்று அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை, கருத்துக்களை வெளிப்படுத்தும் விதம், துடிப்பு மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை சசிதரூர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியர்களின் வாழ்க்கையில் மோடி ஒரு முத்திரையைப் பதித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தியை எதிர்காலப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு அக்கட்சிக்குள் உள்ள சில தலைவர்களுக்கு அத்தகைய கருத்து உடன்பாடில்லை’ என்றார்.

Related Stories: