சாலையோரம் சாய்ந்த நிலையில் மின்கம்பம்: சீரமைக்க கோரிக்கை

உத்திரமேரூர், ஜூன் 8: உத்திரமேரூர் அருகே உள்ள மல்லியங்கரணை சாலையோரம் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சீரமைத்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரங்களில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்கள் வழியாக கடல்மங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் விவசாய நிலத்தின் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று கடந்த 6 மாதங்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மின் கம்பம் வலுவிழந்து விவசாய நிலங்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்பட அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்துடனே தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே சாய்ந்துள்ள இந்த மின்கம்பத்தினை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Related Stories: