திருப்பூர்: கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண், வேலை தேடி ரயிலில் திருப்பூருக்கு வந்தார். நேற்று அதிகாலை அவர், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 35 வயது வாலிபர் ஒருவர், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது, அந்த பெண் வேலை தேடி திருப்பூர் வந்ததாக கூறினார். இதையடுத்து அந்த வாலிபர், ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், அங்கு வேலை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி பைக்கில் அழைத்து சென்றார்.
நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டு கூச்சலிட்டார். தொடர்ந்து வாலிபரை தள்ளி விட்டு அங்கிருந்து அலறியடித்து ஓடி காங்கயம் சாலையில் உள்ள ஒரு பேக்கரிக்குள் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினார். இதையடுத்து, கடை ஊழியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
