சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது 3 வயது குழந்தையை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிபின் மஞ்சு (19) என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தப்பினான். பின்னர் போலீசார் அவனை கைது செய்தனர்.
இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த சிறுமியின் உடலை பார்க்க, கும்மிடிப்பூண்டி தவெக எம்எல்ஏ விஜயகுமார் நேரில் வந்தார்.
அவருடன் ஆர்.எம்.ஓ வனிதா மலர் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்யும் மருத்துவர்கள், காவல்துறையினர் வந்து, குழந்தை சடலத்தை பார்த்துவிட்டு, பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வெளியே வந்தனர். அப்போது ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் திமுக மகளிர் அணியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தவெக எம்எல்ஏ விஜயகுமார், குழந்தையின் பெற்றோரை தனியாக அழைத்து சென்று மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாதர் சங்கத்தினர் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை எம்எல்ஏ தனியாக அழைத்து சென்று மிரட்டுகிறார். அவர்களுக்கு பணம் கொடுத்து கையெழுத்து வாங்கி செல்கிறார்கள். எப்படி இதை அனுமதிக்கிறீர்கள். சம்பவத்தை மூடி மறைக்கிறீர்களா, பணம் பட்டுவாடா நடக்கிறதா என்றெல்லாம் கேள்வி எழுகிறது,’ என்றனர்.
சிறுமியின் உடற்கூறு ஆய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய இடத்திற்கு உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட ேகாரிக்கைகளை பொதுமக்கள் முன்னைத்துள்ளனர். இதுதொடர்பாக உங்களது பதில் என்ன என்று தவெக எம்எல்ஏவிடம் கேட்ட போது, பதில் கூறாமல் காரில் ஏறி சென்றார்.
