பெரம்பூர்: சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகளை அழகுபடுத்த 1200 காகித பூச்செடிகள் வைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் சாலைகளை அழகுபடுத்த மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சாலைகளின் இருபுறமும் அழகான செடிகளை வளர்ப்பதும், வண்ண ஓவியங்களை வரைவது, நீர்ஊற்று அமைப்பது போன்ற பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி, திருவிக நகர் மண்டலம் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 70வது வார்டு மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே செடிகள் மற்றும் குப்பைகள் காய்ந்த நிலையில் இருந்துள்ளன.
அதனை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி அப்பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு 1800 காகித பூச்செடிகளை நட்டு வளர்த்துள்ளனர். தற்பொழுது அது நன்றாக வளர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து இதேபோன்று மற்ற பகுதிகளிலும் சாலையின் நடுவே தடுப்புக்களில் உள்ள குப்பைகள் மற்றும் காய்ந்த செடிகளை அகற்றி கண் கவர் வகையில் செடிகளை வைக்க உள்ளதாக திரு வி க நகர் மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
