திருவண்ணாமலை, ஜூன் 13: அரசு மாதிரிப் பள்ளியில் படித்து நீட் தேர்ச்சி மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்தார். திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் பானுதுறை மகள் நிவ்யாஸ்ரீ(20) திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த இந்த மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
வறுமையான குடும்ப சூழல் மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவியின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கலெக்டர் வந்தனா கார்க் போளூர் தொகுதி எம்எல்ஏ அபிஷேக் ஆகியோர் உடன் இருந்தனர்.
மாணவி மற்றும் மாணவியின் பெற்றோரை சந்தித்து பேசிய அமைச்சர், உயர்கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார். கடுமையான சூழல்களையும் வெற்றியாக எதிர்கொண்டு மருத்துவ கல்வியை தொடரும் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மாணவி மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் அமைச்சர் மற்றும் கலெக்டர் ஆகியோர் உணவு சாப்பிட்டனர். செய்யாறு சிப்காட்டில் 3வது அலகு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு சம்பந்தமாக உண்மை தன்மை கண்டறியும் குழு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேல்மா பகுதியில் நடந்த விவசாயிகளிடம் கருத்துகேட்கும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
