தாயம் விளையாடியதை போலீசுக்கு தெரிவித்ததால் கோஷ்டி மோதல் : 8 பேர் மீது வழக்கு

வந்தவாசி, ஜூன் 4: வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் பணம் கட்டி தாயம் விளையாடுவதாக புகார் அளித்ததால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணகிரி(50).
இவர் அங்குள்ள குளக்கரை பகுதியில் சிலர் பணம் கட்டி தாயம் விளையாடுவதாக போலீசாருக்கு புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி அங்குள்ள விநாயகர் கோயில் அருகே அருணகிரி சென்றாராம்.

அப்போது அங்கிருந்த மணிகண்டன், பாஸ்கரன், பவித்ரன், அருண்குமார் ஆகியோர் அருணகிரியை மடக்கி ஏன் இது போன்று மொட்டை புகார் அனுப்புகிறாய் என கேட்டார்களாம். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அருணகிரியை, மணிகண்டன் கோஷ்டியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையறிந்த அவரது மனைவி செல்வி, மகன் மணிகண்டன், மகள் வைத்தீஸ்வரி ஆகியோர் தடுக்க வந்தனர். அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அருணகிரி குடும்பத்தினரும் மணிகண்டன் கோஷ்டியினரை தாக்கினார்களாம். இதுகுறித்து இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் பொன்னூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் இருதரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: