ஆம்பூர், ஜூன் 4: ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் 8 மணி நேரம் மின் சப்ளை துண்டிப்பால் மின்வாரிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு எற்பட்டது. ஆம்பூர், தேவலாபுரம், குமாரமங்கலம், விண்ணமங்கலம், மிட்டாளம், வீராங்குப்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கோடை கனமழை பெய்தது. இதில் ஆம்பூர் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் மீதும் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுந்ததில், மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதில் ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில் இரவு முழுவதும் மின்சப்ளை இல்லாததால் விடிய, விடிய கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தேவலாபுரம் கிராமத்தின் ராமச்சந்திராபுரம், கம்பகிருஷ்ணாபள்ளி, காமராஜ் புரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சப்ளை செய்யாததால், கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேவலாபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மின்வாரிய அதிகாரிகளிடம், மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சீரமைத்து விரைந்து மின்சப்ளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பாதிக்கப்பட்ட மின் இணைப்புகள் மற்றும் மின் கம்பங்களில் ஏற்பட்ட பழுதுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு மின்சப்ளை மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
