கீழ்பென்னாத்தூரில் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் கடை இயங்குவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

கீழ்பென்னாத்தூர், ஜூன் 13: கீழ்பென்னாத்தூரில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் தொடர்ந்து இயங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன் 717 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், போளூர் தொகுதிகளில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கீழ்பென்னாத்தூர்-கருங்காலிகுப்பம் சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. இந்த கடைக்கு அருகே அரசு ஆண்கள் பள்ளி, மத வழிபாட்டு தலம், கோயில் உள்ளது. மாணவ-மாணவிகள் அதிகம் பேர் இந்த சாலையைத்தான் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். மாலை நேரத்தில் டாஸ்மாக் கடை அருகே பைக்குகள் நிறுத்தி விடுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள், பெண்கள் பெரும் அச்சமடைகின்றனர்.

பள்ளிக்கு அருகிலேயே மதுக்கடை இயங்குவதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகப் பெற்றோர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டிவருகின்றனர். மதுபிரியர்கள் தினமும் நடுரோட்டிலும், சாலை ஓரத்திலும் அருவரகதக்க நிலையில் படுத்திருக்கும் ‘குடிமகன்’ களால் இப்பகுதி எப்போழுது என்ன நடக்குமே என தினம் தினம் மிகவும் அச்சத்திலேயே அப்பகுதி பொதுமக்கள் வாழ்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடும் மதுப்பிரியர்கள், அருகில் இருக்கும் ஏடிம் மையத்தின் அருகில் படுத்து இருப்பதும், வங்கி வாசலில் படுப்பதும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. போதையில் தல்லாடும் மதுப்பிரியர்களால் இப்பகுதியில் தொடர்ச்சியாக வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பெண்களும், முதியவர்களும் தினமும் அச்சத்துடன் கடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த டாஸ்மாக் கடையை அகற்றாதது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மாற்று இடம் தேர்வு செய்யும் வரை பழைய இடத்திலேயே கடை தொடரும் என்றனர். எனவே, அரசு வெறும் அறிவிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல், பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: