திருப்பத்தூர், ஜூன் 4: திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான எம்.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருப்பத்தூர் மாவட்ட அளவில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் வழிகாட்டுதலின்படியும், வரும் 13ம் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு கடந்த ஜூன் 1ம் தேதி முதல், வரும் 12ம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வு, அந்தந்த மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலேயே மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகள், சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்பட உள்ளது.
எனவே இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி, நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு, சமரசம் செய்து கொண்டு வழக்கினை முடித்து கொள்ளலாம். மேலும், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டால், நீதிமன்ற கட்டணம் வழக்குதாரர்களுக்கு திருப்பித் தரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
