ஆரணி, ஜூன் 4: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்திற்கு ஆரணி, அகராப்பாளையம், கண்ணமங்கலம், முள்ளிப்பட்டு, எஸ்வி நகரம் ஆகிய 5 பிர்காக்களின் கீழ் உள்ள 52 வருவாய் கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ், தமிழ் நிலம் திருத்தம், மூத்த குடிமகன் சான்று, விதவை சான்றுகள், இலவச வீட்டுமனை பட்டா, கணினி பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு விண்ணப்பித்தும், தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை கோரிக்கை வாயிலாக மனுக்களை அளித்தும் வருகின்றனர்.
ஆனால் தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. மனுக்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு, நடவடிக்கையின்றி இருந்து வருகிறது. இதனால், சான்றுகள் பெற காலதாமதமாவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த திட்டங்கள், வங்கியில் கடன், நலத்திட்டங்கள் பெற விண்ணப்பித்தும் சான்றுகள் பெறமுடியாமல் காத்துக்கிடக்கின்றனர். தற்போது அனைத்து சான்றுகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறும் வசதிகள் இருந்தும், இதுபோன்ற தாமதம் ஏற்படுகிறது. அவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்யும் பிறப்பு, இறப்பு சான்றுகள், பட்டா பெயர் மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கு தாசில்தார், விஏஓ, ஆர்ஐக்கள் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளை நேரில் விசாரணை நடத்தியும், சான்றுகள் வழங்காமல் அலைகழித்து வருகின்றனர்.
இதனால் விரக்தியடையும் பொதுமக்கள் தாசில்தாரை அலுவலகத்தில் நேரில் பார்க்க சென்றாலும், தாசில்தார் அலுவலகத்தில் இருப்பதில்லை. அங்கிருக்கும் அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிக்காமல், பல்வேறு காரணங்களை கூறியும், அலுவலக வேலையாக வெளியில் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பலமணி நேரம் பசியுடன் காத்திருந்தும், தாசில்தாரை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் பலர் தாசில்தாரை நேரில் சந்தித்து மனுகள் மற்றும் குறைகளை தெரிவிக்க முடியாததால், அலுலகத்தில் உள்ள உதவியாளர், கிளார்க் ஆகியோரிடம் தங்கள் மனுக்களை கொடுத்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு, பட்டா திருத்தம், பட்டா மாற்றம், யூடிஆர் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சான்றுக்கு விண்ணப்பித்துள்ள மனுக்களை ஆர்ஐ, விஏஓ, மண்டல துணை வட்டாட்சியர்கள் விசாரணை நடத்தி தாசில்தாருக்கு பரிந்துரை செய்யாமல் அலைகழித்து வருகின்றனர். அவ்வாறு பரிந்துரை செய்தாலும், தாசில்தார் நடவடிக்கை எடுக்காமல், லஞ்சம் கொடுக்கும் நபர்களின் மனுக்களுக்கு மட்டும் வேலையை முடித்து கொடுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே ஆரணி தாலுகா அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மனுக்கள் மீது தாசில்தார் உடனடியாக விசாரணை நடத்தி, சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
