முன்னாள் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து வழக்கு: விரிவான உத்தரவு பிறப்பிக்கவுள்ளதாக ஐகோர்ட் தகவல்

சென்னை:தமிழக முன்னாள் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியதை எதிர்த்து மூன்றாம் நபர் எப்படி வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் உதயசந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வுக்காக இந்த பதவி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், புள்ளியியல் துறை செயலாளர் ஜெயா, சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தொழில் மேம்பாடு துறை செயலாளர் சர்மா, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன்,

சர்வேயர் கட்டுப்பாடு ஜெனரல் மக்வானா, பள்ளி கல்வி துறை செயலாளர் மோகன் ஆகியோருக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறவில்லை என்றார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, இது தற்காலிக உத்தரவுதான் என்றார். இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் பணி தொடர்பான வழக்கை 3ம் நபர் எப்படி தொடர முடியும். இந்த வழக்கை தள்ளுபடி செய்வது குறித்த விரிவான உத்தரவை பிறப்பிக்கவுள்ளோம் என்று தெரிவித்து தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

Related Stories: