சுற்றுலா தலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அமைச்சர் ராஜேஷ்குமார் உத்தரவு

சென்னை: உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமையில் நேற்று சென்னை, வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசியதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக, பொறியாளர் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் தற்போதைய நிலை குறித்து கேட்டு அறிந்து பணிகளை அலுவலர்கள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலாத்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் மாவட்ட வாரியாக சுற்றுலா தலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்தும், மாவட்டந்தோறும் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா தலங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் ஸ்வர்ணா, சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொதுமேலாளர் லட்சுமி பிரியா, சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: