கோவை: கோவை அடுத்த சூலூர் பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமியை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்தி (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் மோகன் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி மீது சக கைதிகள் சமீபத்தில் சமையல் பாத்திரங்களால் சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து இருவரையும் போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். இதில், பல்வேறு தகவல்கள் பெறப்பட்டன. இது வழக்கு தொடர்பான விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூலூர் போலீசார் இ-பைல் மூலம் 819 பக்க குற்றப்பத்திரிகையை கோவை போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரேத பரிசோதனை அறிக்கை விவரம் மற்றும் கைதான இருவரின் வாக்குமூலம் ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
விரைவில் இந்த குற்றப்பத்திரிகையின் நகல் கைதிகளிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை உள்ளிட்ட அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவித்தனர்.
