ஒப்பந்ததாரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான திருப்பூர் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது

திருப்பூர்: திருப்பூரில் ஒப்பந்ததாரருக்கு பில் தொகை விடுவிக்க ரூ.5 லட்சம் வாங்கி கைதான மாநகராட்சி இளநிலை பொறியாளர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.7.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் கே.செட்டிபாளையத்தை சேர்ந்த மாநகராட்சி ஒப்பந்ததாரர் முருகன் (52). இவர், திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்து முடித்த பணிகளுக்கு பில் தொகை விடுவிக்க கோரி மண்டல இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் (52) என்பவரிடம் விண்ணப்பித்தார்.

அவர் பில் தொகையை விடுவிக்க ரூ.8.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ரூ.5 லட்சம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து முன் பணமாக கொடுக்குமாறு கூறினர். அதன்படி, நேற்று முன்தினம் கணபதிபாளையத்தில் பொறியாளர் சுப்பிரமணியனிடம் பணத்தை ஒப்பந்ததாரர் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சசிரேகா ஆகியோர் சுப்பிரமணியனை கைது செய்தனர். இதற்கிடையே சுப்பிரமணியனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தொடர்ந்து தாராபுரம் சாலையில் உள்ள அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. ஒட்டு மொத்தமாக ரூ.7.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறுகையில்,“லஞ்சம் வாங்கிய சுப்ரமணியன் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போது ரூ.7.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மேலும் இது போன்று யாரிடம் அவர் லஞ்சம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றனர்.

Related Stories: