பெருநாழி அருகே ஆங்கிலேயர் கால எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுப்பு: சமஸ்தான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு தந்த கலெக்டர்

 

 

ராமநாதபுரம்: பெருநாழி அருகே, ஆங்கிலேயர் கால எல்லைக்கல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில், ராமநாதபுரம், எட்டையபுரம் சமஸ்தான ஊர்களின் எல்லைப் பிரச்னைக்கு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மதுரை பிரின்சிபல் கலெக்டர் கொடுத்த தீர்ப்பு பொறிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பெருநாழி அருகில் துத்திநத்தம் வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தின் வடமேற்கில் 3 கி.மீ தொலைவில் 5 ஊருணிகளின் அருகில், விவசாய நிலத்தில் 12 அடி உயர கருங்கல் தூணின் உச்சியில் கல்வெட்டு இருப்பதாக, அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியர் விஜயராமு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் அளித்தார்.

இதன்பேரில், சௌந்தரராஜன், செல்லம் ஆகியோர் உதவியுடன் கல்வெட்டைப் படியெடுத்துப் படித்து ஆய்வு செய்த வே.ராஜகுரு கூறியதாவது: கி.பி.1834-ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின்போது, ராமநாதபுரம் சேகரம் பெருநாழி கிராமத்துக்கும், தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் சேகரம் மாவலோடை, கூதலபுரம், சின்னூர் கிராமங்களுக்கும் இருந்த எல்லைப் பிரச்சினையில் அப்போதைய மதுரை பிரின்சிபல் கலெக்டர் ஜான்பிளாகி பான்துரை கொடுத்த தீர்ப்பு, எல்லைக்கல்லில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெருநாழியின் மேற்கெல்கை மால் ஐந்து ஊருணிகளுக்கு வடக்கு, பெருநாழி மேற்கெல்கைக்கு பரளச்சி கிழக்கெல்கை, பூலாங்கால், செங்குளம் தெற்கெல்கை, இதற்காக ஸ்தாபித்த எல்கைக்கல் என கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வரிகள் உள்ள கல்வெட்டில், சாலிவாகன சக ஆண்டு 1757, தமிழ் ஆண்டு ஜய வருடம் ஆவணி 9, ஆங்கில ஆண்டு 1834, ஆகஸ்டு 23ம் தேதி என மூன்று ஆண்டுகள் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ் எண்கள், தமிழ் கூட்டெழுத்துகள், கிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டில் வெட்டாமல் விடுபட்ட சொற்களை அதன் மேல் சிறியதாக வெட்டியுள்ளனர். கல்வெட்டு குறிப்பிடும் அப்போதைய மதுரை பிரின்சிபல் கலெக்டர் ஜான்பிளாகி பான்துரை 1834 முதல் 1847 வரை பதவியில் இருந்தவர். தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஊர்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு வெட்டிய காலத்தில் துத்திநத்தம் வாலசுப்பிரமணியபுரம் உள்ளிட்ட இதன் அருகில் உள்ள பல ஊர்கள் உருவாகி இருக்கவில்லை. கல்வெட்டு 192 ஆண்டுகள் பழமையானது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: