மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடிய விவகாரம்; சிபிசிஐடி எஸ்பி சாஜிதா தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது

 

* கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் கோபிநாத் உட்பட 2 பேரை காவலில் எடுக்க முடிவு

சென்னை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர்கள் தொடர்பான 18 முக்கிய ஹார்ட் டிஸ்க்குகள் திருடிய விவகாரத்தில் சிபிசிஐடி எஸ்பி சாஜிதா தலைமையிலான குழுவினர் தங்களது விசாரணையை தொடங்கினர். தமிழக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 45 ஆயிரம் மின்மாற்றி ெடண்டர் மற்றும் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான ஆவணங்கள் சேகரித்து வைத்திருந்த 18 ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மலர்விழி, கடந்த 2ம் தேதி சிந்தாதிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ஹார்ட் டிஸ்க்குகள் திருடியதாக மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கணினி பராமரிப்பு பணிகளில் ஈடுபட்ட அரக்கோணத்தை சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபிநாத்(31) மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் வாங்கிய பெங்களூரு நிறுவனத்தின் உரிமையாளர் முரளி மனோகர்(32) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34 ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட 34 ஹார்ட் டிஸ்க்குகளில் உதவி பொறியாளர் மலர் விழி புகார் அளித்த 18 ஹார்ட் டிஸ்க்குகள் இல்லை என்று தெரியவந்தது.

அதைதொடர்ந்து இந்த வழக்கை சென்னை மாநகர காவல்துறையில் இருந்த திருட்டு வழக்கை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி எஸ்பி சாஜிதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் குழுவினர் தனித்தனியாக நியமிக்கப்பட்டு தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. டெண்டர் தொடர்பான ஹர்ட் டிஸ்க்குகள் குறித்து தனியாக விசாரணை நடத்த டிஎஸ்பி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். அனைவரும் தங்களது விசாரணையை நேற்று தொடங்கினர்.

இதனால் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மின்வாரிய ஒப்பந்த ஊழியரான கோபிநாத் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் வாங்கியதாக கைது செய்ப்பட்ட முரளி மனோகர் ஆகியோரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories: