போதையில் மொபட்டில் சென்றபோது பைக் மோதி பெயின்டர் பலி: நண்பர்கள் படுகாயம்

 

வேளச்சேரி: பெரிய கோவிலம்பாக்கம் கேபிஜி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (23), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான ரமேஷ் (46), அன்பழகன் ஆகியோருடன், விடுதலை நகர் அருகே மது அருந்தியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது மொபட்டில், அன்பழகனை ஈச்சங்காட்டில் உள்ள வீட்டில் விடுவதற்காக ஜெகநாதனுடன் துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஈச்சங்காட்டில் உள்ள பிரபல கார் சர்வீஸ் சென்டர் அருகே, வலதுபுறம் திரும்பியபோது பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் 3 பேரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஜெகநாதன் இறந்து விட்டது தெரியவந்தது. மேலும், தலையில் பலத்த காயத்துடன் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். அன்பழகனும் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.

 

Related Stories: