திருப்பூர்,ஜூன் 6: திருப்பூரில் கோவில்வழி பகுதியில் தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில், கடந்த மாதம் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றின் போது மேற்கூரைகள் பலத்த சேதமடைந்தன. மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை அதை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகளால் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலிலும், திடீரென பெய்யும் மழையிலும் ஒதுங்க இடமின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகக் கவனத்தில் கொண்டு,சேதமடைந்த மேற்கூரைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
