அபராதம் விதிப்பை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

திருப்பூர், ஜூன் 6: மதுரையில் வழக்கறிஞர்களுக்கு அபராத தண்டனை விதித்த நீதிபதியின் செயலைக் கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக காவல் துறை தனது கட்சிக்காரரை சிறையில் அடைக்க முற்பட்டுள்ளது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவரின் தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கச் சென்றனர். ஆனால் இவர்கள் மீது காரணம் கேட்கும் அறிவிப்பு வழங்கி, தங்கள் தரப்பு நியாயத்தைக் கூட முழுமையாகக் கேட்காமல், மதுரை எண் 5 குற்றவியல் நீதிமன்றம் அபராத தண்டனை விதித்ததாக கூறப்படுகிறது. இது நீதிமன்றம், வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே மதுரை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீது விதித்திருக்கும் அபராதத் தண்டனையை உடனடியாக நீதிமன்றம் கைவிட வேண்டும். வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஒற்றுமையைப் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும். மதுரை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீது அபராத தண்டனை விதித்திருக்கும் மதுரை 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். தேசியக்குழு உறுப்பினர் பொன்ராம், வழக்கறிஞர் கனகசபை ஆகியோர் உரையாற்றினர். வழக்கறிஞர் செல்லபாண்டியன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இச்செயலை கண்டிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளையும் புறக்கணித்தனர்.

 

Related Stories: