உடுமலை, ஜூன் 4: உடுமலை அடுத்துள்ள கிழுவன்காட்டூர், உரல்பட்டி பாப்பான்குளம் உட்பட பல்வேறு கிராமங்கள் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் தண்டு கீரை, பாலக்கரை, மணத்தக்காளி எனப்படும் சுக்கட்டிகீரை உட்பட 10-க்கும் அதிகமான கீரைவகைகள் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யபட்டு வருகின்றது. இந்த நிலையில் அதிக அளவு கீரை சாகுபடி நடைபெற்று வரும் வகையில் தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கீரைகள் வாங்கி வருகின்றன. இங்கு வாங்கப்படும் கீரைகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கிழுவன்காட்டூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆண்டு முழுவதும் அதிக அளவில்
கீரைகள் சாகுபடி செய்யப்படுகின்றது. இங்கு அரசு கொள்முதல் மையம் இல்லாத காரணத்தால் தனியார் நிறுவனங்களை நாடிச்செல்ல வேண்டி உள்ளது.
விவசாயிகளிடம் ஐம்பது ரூபாய்க்கு வாங்கி 100 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் சில்லறை விற்பனைகள் இரண்டு மடங்குக்கு மேல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடமிருந்து குறைவான விலைக்கு கீரைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, அரசு கீரை கொள்முதல் மையம் அமைத்து விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும். பொது மக்களுக்கும் குறைந்த விலையில் கீரை கிடைக்கும். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் கள ஆய்வு மேற்கொண்டு கிழுவன்காட்டூர் பகுதியில் வேளாண் வணிகத்துறை அல்லது கூட்டுறவுத் துறை மூலம் அரசு கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
