மாநகராட்சி சார்பில் வைத்துள்ள செயற்கை நீரூற்றுகள் முறையாக பராமரிக்கப்படுமா?

திருப்பூர், ஜூன் 8: திருப்பூருக்கு வருகிறவர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்று பழுதாகி உள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூருக்கு தினமும் வேலை தேடி வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வருகின்றனர். இதுபோல் பனியன் வர்த்தகம் தொடர்பாகவும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வந்து செல்கின்றனர். அவர்களை வரவேற்கும் விதமாக மாநகராட்சிக்கு சொந்தமான முக்கியமான இடங்களில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த செயற்கை நீரூற்றுகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே, இந்த பழுதடைந்த செயற்கை நீரூற்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைவிடப்படும் பரந்தூர் விமான நிலைய திட்டம்?
தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கிலும், சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் 2வது சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், பல ஆயிரம் கோடி முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 10 கோடி பயணிகளை கையாளுவது, இரண்டு அதிநவீன ஓடுதளங்கள், பிரமாண்டமான சரக்கு போக்குவரத்து மையம் மற்றும் பன்னாட்டு வர்த்தகங்களை ஈர்க்கும் ஏரோசிட்டி ஆகியவை இந்த திட்டத்தின் முக்கியக் கூறுகளாக உள்ளன. மேலும், விமான நிலையம் என்பதோடு மட்டுமல்லாமல் அதிவேக மெட்ரோ ரயில், விரைவுச்சாலை இணைப்புகள் என தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியை மையப்படுத்திய திட்டமாக உருவாக்கப்பட்டது பரந்தூர் விமான நிலைய திட்டம்.

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தது. விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக கிராமப்புறங்களில் நிலம் எடுப்புப் பணிகளை மேற்கொண்டு, நில உரிமையாளர்களிடம் பத்திரப்பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, 1,700 ஏக்கருக்கு மேலாக, நில எடுப்புப் பணிகளை முடித்துள்ளனர். ஆனால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடும் திட்டத்தில் தவெக அரசு உள்ளதாகவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்கும் யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கடந்த திமுக ஆட்சிக் காலத்தின்போது பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் தவெக தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான விஜய். எப்போதும் இந்த திட்டத்திற்கு எதிராக இருப்பேன் எனவும் தெரிவித்தார். அந்த வகையில் தவெக அரசு பரந்தூர் விமான நிலையை திட்டத்தைக் கைவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை தவெக அரசு சென்னைக்கான இரண்டாவது விமான நிலைய திட்டமான பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிட்டால், அது நீண்டகால நோக்கில் பார்க்கையில் தமிழ்நாட்டின் பொருளாதார, தொழில், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துகளை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை: தற்போதுள்ள சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருந்தாலும் அது மற்ற பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்களை ஒப்பிடுகையில் மோசமான தரத்தில் உள்ளதாகப் பயணிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது சென்னை விமான நிலையம் மிகச் சிறியதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை நகரம் வளர்ந்து வருவதன் காரணமாக இதற்குமேல் அந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு ரீதியாகும் நவீனமாக இல்லாமல் உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் தேர்வாக இந்த விமான நிலையம் இருப்பதில்லை எனவும் கூறுகிறார்கள்.

இப்போது சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமானம் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு, சுமார் 420 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 57,856 ஆக இருக்கிறது. ஆனால், கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயணிகள் வருகை நாள் ஒன்றுக்கு சராசரியாக 62,586 ஆக இருந்தது. நடப்பாண்டில் கடந்த ஏப்ரலில் இது குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி சென்னை விமான நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக டெல்லி, மும்பை, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா என்று தரவரிசை பட்டியலில், 3வது இடத்தை பிடித்தது. தென்னிந்தியாவில் பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்களை பின்தள்ளி, முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது சென்னை விமான நிலையம் பயணிகள் எண்ணிக்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில், இந்திய அளவில் 3வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு ஏப்ரலில் டெல்லி விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,21,734 பயணிகளும், மும்பை விமான நிலையத்தில் 1,34,900 பயணிகளும், பெங்களூரு விமான நிலையத்தில் 1,22,835 பயணிகளும், ஐதராபாத் விமான நிலையத்தில் 74,960 பயணிகளும், கொல்கத்தா விமான நிலையத்தில் 58,834 பயணிகளும் பயணித்துள்ளனர். ஆனால் சென்னை விமான நிலையத்தில் சராசரியாக 57,856 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். இந்த ஆண்டு பயணிகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததோடு 6ம் இடத்திற்கு பின் தங்கி உள்ளது. லக்கேஜ்கள் வருவதற்கு மணிக்கணக்கில் தாமதமாதல், பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை சென்னை விமான நிலையத்தில் ஏற்படுகிறது.

அதேபோல் விமான நிலையத்தை விட்டு வெளியில் வரும் பயணிகள் உடனடியாக வாகனங்களில் ஏறி வீடுகளுக்கு செல்ல முடியாமல், மல்டி லெவல் கார் பார்க்கிங் 4 மாடியில் ஏறி, லிப்ட்களுக்கு நீண்ட நேரம் காத்திருந்து ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற அவலநிலை இந்தியாவில் எந்த விமான நிலையத்திலும் இல்லை என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர். அதோடு விமான வருகை, புறப்பாடு, தாமதம், ரத்து குறித்த தகவல்கள் பயணிகளுக்கு முறையாக தெரியப்படுத்துவது கிடையாது. மேலும், இந்த விமான நிலையம் தற்காலத்திற்கேற்ப நவீன தன்மையுடன் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான பயணிகள் தங்களுடைய சர்வதேச விமானப் பயணங்களுக்கு சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தாமல், பெங்களூரு, ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட விமான நிலையங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த திட்டத்தால் தொழில்துறை மட்டுமல்லாமல் சிறந்த வான்வழிப் போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் இருந்தால் உலகின் சுற்றுலா மையமாகவும் தமிழகம் திகழவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு கனவு நிறைவேற இன்னும் தாமதமாகும் என்றும் அதை நோக்கிய வேகத்தை மட்டுப்படுத்தும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். காரணம், போதுமான வான்வழிப் போக்குவரத்தும், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல் போகும்பட்சத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் வேறு மாநிலங்களை நோக்கி நகரும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, ஒன்றிய பாஜ அரசு தமிழகத்திற்கு வரும் தொழில் முதலீடுகளை பாஜ ஆளும் மாநிலங்களுக்கு திசை திருப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதுபோன்ற நிலையில் ஒருவேளை பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டால் மேற்கண்ட திட்டங்களும் இல்லாமல் போகும். அதனால், சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களின் தொழில் துறை வளர்ச்சி தடைபடுவது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு இழப்புகளும் ஏற்படும் என எச்சரிக்கின்றனர். மேலும், தவெக அரசின் அலட்சியத்தால் ஏற்கனவே தமிழகத்தில் முதலீடு செய்யவிருந்த பல ஆயிரம் கோடி முதலீடுகள் தமிழகத்தைவிட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் மேம்போக்காக பரந்தூர் திட்டத்தை அணுகி அதை புறந்தள்ளாமல், எதிர்காலத்தை, தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கவனத்தில் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: