வேலூர்: வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதி ரவுடிகளுடன் சேர்ந்து, பயங்கர ஆயுதங்களுடன் பிறந்த நாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வண்டறந்தாங்கலை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜானி(40). இவர் மீது 6 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், கடத்தல், 20 வழிப்பறி, பணம் கேட்டு மிரட்டல் என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 9 வழக்குகளில் இன்னும் புகார்களே பதிவு செய்யப்படவில்லை.
புகார் பதிவு செய்யப்படாத குற்றங்களின் எண்ணிக்கை நூற்றுக்குமேல் இருக்கும் என்கின்றனர் காவல்துறையினர். என்கவுண்டர் பட்டியலில் உள்ள ஜானி, சாட்டிலைட் போன் மூலம் சிறையில் இருந்தவாறே தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2018ல் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து அதன்பின்பு தலைமறைவானார்.
தொடர்ந்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த ஜானியை கடந்த 2020ல் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்து வேலூர் சிறையிலும், பின்னர் கடலூர் சிறையிலும் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியில் உள்ள ரவுடி ஜானி கொலை, கொலை முயற்சி என தன் மீதான வழக்கு விசாரணைகளுக்கு கோர்ட்டில் ஆஜராகி வந்ததுடன், மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர் போலீசார்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு ஜானி தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அதில் வேலூர் மக்கான், காட்பாடி, சத்துவாச்சாரி, ஓல்டு டவுன், தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை என பல பகுதிகளை சேர்ந்த ரவுடி சகாக்களை அழைத்து வந்து அவர்களுக்கு பார்ட்டி வைத்து, வண்டறந்தாங்கலில் வீதியில் வீச்சரிவாள், கத்தி, துப்பாக்கி ஆகியவற்றுடன் கேக் வெட்டியும், ரீல்ஸ் எடுத்தும் கொண்டாடியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த ரீல்ஸ் வெளியாகி, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், காட்பாடி, வேலூர் பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து எஸ்பி சிவராமன் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்பாடி போலீசார் ரவுடி ஜானியை அவரது வீட்டில் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
* அச்சமின்றி உலா வரும் ரவுடிகள் அச்சத்தில் மக்கள்
ஜானியை போன்றே வேலூர் மாவட்டத்தில் பல கொலைகள், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என பல வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகளான வசூர் ராஜா, வீச்சு தினேஷ், காகிதப்பட்டறை ராஜா ஆகியோரும், இவர்களது அடிபொடிகள், ஓல்டு டவுன், தோட்டப்பாளையம், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை உட்பட பல பகுதிகளை சேர்ந்த ‘அல்லு, சில்லு’ ரவுடிகளும் ஜாமீனில் வெளியில் சுதந்திரமாக அச்சமின்றி உலா வருகின்றனர்.
இவர்களின் செயல்பாடுகளும் தொடர்ந்தே வருகிறது. ஆனால் பெரும்பாலும் புகார்கள் வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதோடு தற்போதைய தமிழக சூழலும், ஆங்காங்கே நடந்து வரும் குற்றச்சம்பவங்களும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
