மது போதையில் நண்பர்கள் வெறிச்செயல் 10ம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை: பள்ளிக்கு சென்ற முதல் நாளே கொடூரம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கண்மாய் பகுதியில் மதுபோதையில் நண்பர்களால் பத்தாம் வகுப்பு மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் அஸ்வின்(15). இவர், அருகிலுள்ள திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் 10ம் வகுப்புக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

அஸ்வின் மற்றும் அவரது நண்பர்கள் பாகனேரி அருகே இளந்தமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தரம் மகன் அரவிந்த் (25), காரையூர் சுப்பிரமணியன் மகன் கணேசன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர், டூவீலரில் அப்பகுதியை சேர்ந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. மாலை 4 மணியளவில் கீழக்காவனிப்பட்டி கண்மாய் பகுதிக்குள் சென்று 4 பேரும் மீண்டும் மது அருந்தி உள்ளனர். அப்போது அரவிந்த் திடீரென அஸ்வினை தாக்கியுள்ளார். இதனை பார்த்து 17 வயது சிறுவன் கோபம் அடைந்து அங்கிருந்து சற்று தூரம் சென்றதாக கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து வந்தபோது அஸ்வின் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். சிறு கத்தியை பயன்படுத்தி அரவிந்த், கணேசன் இருவரும் அஸ்வின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளதாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த 17 வயது சிறுவனை, டூவீலரில் அழைத்துக் கொண்டு இருவரும் திருப்புத்தூர் வந்துள்ளனர். அங்கு சிறுவனை இறக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிறுவன், திருப்புத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் நேற்று காலை போலீசார் அங்கு சென்று அஸ்வின் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கீழச்சிவல்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து அரவிந்த், கணேசனை தேடி வருகின்றனர். இதுபற்றி சிவகங்கை எஸ்பி சிவப்பிரசாத் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மது போதையில் பத்தாம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: